கனடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஏழு பேர் ஒரு கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது
Toronto-வில் cryptocurrency சொத்துக்களை பறிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக கனடிய இராணுவத்தின் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த July மாதம் அரங்கேறிய கடத்தல் சம்பவம் தொடர்பாக, கனடிய இராணுவத்தின் மூவர் உட்பட மொத்தம் 7 பேரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.
Toronto காவல்துறை புதன்கிழமை (14) காலையில் நடத்திய அவசரச் செய்தியாளர் சந்திப்பில் இந்தத் திடுக்கிடும் விபரங்கள் வெளியாகின.
இதில் கைதானவர்கள் விபரங்கள்:
• 22 வயதான Talarambage Sachintha Fernando – கனடிய ஆயுதப்படை (CAF) உறுப்பினர் (7th Toronto Regiment)
• 29 வயதான James Moreau – கனடிய ஆயுதப்படை (CAF) உறுப்பினர் (7th Toronto Regiment)
• 24 வயதான Jack Miley – கனடிய ஆயுதப்படை (CAF) உறுப்பினர் (7th Toronto Regiment)
• 22 வயதான Saiefeddine Adem
• 24 வயதான Raheem Bishop-Jackson
• 39 வயதான Christian Darbandi
• 39 வயதான Suhaib Alekozai
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 3D-அச்சடிக்கப்பட்ட துப்பாக்கிகள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர், முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு, பலவந்தமாக ஒரு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார்.
கடத்தப்பட்ட நபரை ஒரு இரகசிய இடத்தில் சிறை வைத்த கும்பல், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவரது கணக்கில் இருந்த பல இலட்சம் மதிப்புள்ள cryptocurrency digital சொத்துக்களின் இரகசியக் குறியீடுகளைப் பறிக்கக் கொடூர வன்முறையை கையாண்டுள்ளது.
இதில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு சந்தேக நபர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட நபரை உயிருடன் மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
கனடிய ஆயுதப் படையில் பணியாற்றிவரும் உறுப்பினர்கள் இத்தகைய கொடூர கொள்ளை சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட மிகக் கடுமையான பிரிவுகளின் கீழ் 82 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்செயல்களுக்கு இராணுவத்தின் உத்தியோகபூர்வ ஆயுதங்களோ அல்லது சிறப்புப் பயிற்சி உத்திகளோ பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து மாகாணக் காவல் துறையுடன் இணைந்து இராணுவ காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
