Riyadh சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் Riyadh சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏமன் நாட்டு Houthi கிளர்ச்சியாளர்கள் நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும். குறிப்பாக King Khalid சர்வதேச விமான நிலையத்திற்கு கனடியர்கள் எவரும் எவ்விதப் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் கனடிய அரசாங்கம் அவசர பயணத் தடையை விதித்துள்ளது.
48 மணி நேரத்திற்குள் Riyadh சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர் – நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இதன் காரணமாக விமான நிலையம் முழுமையாக முடங்கி, Riyadh வான்வெளி முழுவதும் எவ்வித விமானப் போக்குவரத்து இன்றி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை கனடிய பிரதமர் Mark Carney, வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
பொதுமக்கள் பயணிக்கும் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை கனடா மிக வன்மையாகக் கண்டிக்கிறது என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
சவுதி வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கனடிய வெளியுறவு அமைச்சர், சவுதி அரேபியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடாவின் முழு ஆதரவையும் அளித்துள்ளார்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் வசிக்கும் கனடியர்களுக்கு கனடிய தூதர் Jean-Philippe Linteau எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
