Québec மாகாண சட்டமன்றத் தேர்தலில் Parti Québécois (PQ) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு நெருங்கி வருவதாக புதிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Quebec மாகாண சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை (05) நடைபெறுகிறது.
இந்த நிலையில் இறுதியாக வெளியான கருத்து கணிப்பு, PQ கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு நெருங்கி வருவதாக தெரிவிக்கின்றது.
தேர்தல் பிரசாரத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்பட்ட மூன்று புதிய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள், PQ கட்சி பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
Quebec சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 64 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், PQ கட்சி 67 இடங்கள் வரை வெல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்புகளின் படி, தற்போது மாகாணத்தில் ஆட்சியில் இருக்கும் CAQ கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்தத் தேர்தலில் CAQ கட்சி 16 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும் சாத்தியத்தை எடுத்து காட்டுகிறது.
இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் படி, PQ கட்சி 30 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், Liberal கட்சி 26 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும், Conservative கட்சி 18 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில் “ஒரு வாரக் பிரசாரக் காலம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எங்களது இலக்கை அடைய முழு வேகத்துடன் பிரசாரம் செய்து வருகிறோம்” என PQ கட்சியின் தலைவர் Paul St-Pierre Plamondon தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைத்தால், Quebec மாகாணத்தின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற அது வழிவகுக்கும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Quebec மாகாணத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான தேர்தல் திங்களன்று நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே சுமார் 9,00,000 வாக்காளர்கள் (13.79%) தங்களது வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
