Toronto பெரும்பாகம் (GTA) முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு துப்பாக்கிக் கடத்தல் வலையமைப்பைப் Peel பிராந்தியக் காவல்துறையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
Project Red Zone என பெயரிடப்பட்ட இந்த அதிநவீன இரகசிய நடவடிக்கை மூலம் 23 துப்பாக்கிகள், 824.75 கிராம் போதைப்பொருள், 950-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, Ontario குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து கடந்த October 2025 முதல் July 2026 வரை இந்த இரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
இதில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, கடந்த March 2024-ல் Mississauga நகரில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்டது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட 23 துப்பாக்கிகளில் 15 துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டவை என கூறப்படுகிறது.
மேலும், இவை GTA பகுதியில் நடைபெற்ற 14 வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுடன் தொடர்புடையவை எனத் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இதில் 23 வயதான ஜனோஜ் தயாபரன், 23 வயதான அக்ஷயா ஸ்ரீகாந்தன், 24 வயதான Stephen Prakash Consala , 28 வயதான Sammy Shaik ஆகியோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த வலையமைப்பின் முதன்மைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜனோஜ் தயாபரன், Stephen Prakash Consala ஆகிய இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் தங்களின் பிணை விசாரணை வரை தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய இரு குற்றவாளிகளான அக்ஷயா ஸ்ரீகாந்தன், மற்றும் Sammy Shaik ஆகியோர் தற்காலிகமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் Ontario நீதிமன்றத்தில் பின்னொரு திகதியில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
