கனடாவிலிருந்து அமெரிக்கத் தூதரை வெளியேற்ற கோரும் மனு 200,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
இந்த மனு விரைவில் கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra-வை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரும் மனு அதிக ஆதரவைப் பெற்று வருகிறது.
Calgary நகரைச் சேர்ந்த பெண் ஒருவரினால் July 21 ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி மனுவில் 225,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இவர்களில் அநேகர் Ontario, British Columbia, Alberta, Quebec ஆகிய மாகாணங்களை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இதில் கையொப்பம் இட்டவர்கள், “Pete Hoekstra-வை முறைப்படி விரும்பத்தகாத நபராக (persona non grata) அறிவித்து, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்குமாறு கோர வேண்டும்” என மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.
இந்த மனு இலையுதிர் காலத்தில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பசுமைக் கட்சியின் தலைவர் Elizabeth May மூலம் இந்த மனு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
கனடா-அமெரிக்க உறவை சிதைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணான வகையில் கனடிய அரசியல் விவாதங்களில் தலையிட்டதாகவும் Pete Hoekstra மீது அந்த மனு குற்றம் சாட்டுகிறது.
கனடிய விவகாரங்களில் அமெரிக்காவின் இராஜதந்திர ரீதியான தலையீட்டை மறு ஆய்வு செய்யுமாறு நாடாளுமன்றக் குழுவொன்றுக்கு Liberal அரசாங்கம் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனு கூறுகிறது.
கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது என்பது பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கு இடையிலான ஒரு சிறந்த விவாதப் பொருளாக அமையும் என தெரிவித்ததால் மூலம் Pete Hoekstra கவனம் பெற்றார்.
இந்த மனுவில் கையெழுத்திட November 18 வரை காலக்கெடு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
