Toronto நகர முதல்வர் போட்டியில் மூன்றாவது பிரதான வேட்பாளர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
Toronto நகர முதல்வர் பதவிக்கான வேட்புமனுவை Conservative கட்சி முன்னாள் அமைச்சர் Chris Alexander தாக்கல் செய்தார்.
Toronto நகர மன்றத்தில் தனது வேட்புமனுவை புதன்கிழமை (29) பதிவு செய்ததன் மூலம் 33 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில் அவரும் இணைந்தார்.
இந்தப் பட்டியலில் நகர முதல்வர் Olivia Chow, நகரசபை உறுப்பினர் Brad ஆகியோர் அடங்குவர்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
திசை மாறிச் சென்று கொண்டிருப்பதாக அவர் கருதும் ஒரு நகரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர தான் சரியான நபர் என Chris Alexander தன்னை முன்னிறுத்தி கொள்கிறார்.
அவரது வருகை உடனடியாக பிரதான வேட்பாளர்களில் ஒருவரிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்தது.
Chris Alexander குறித்து “தான் கேள்விப்பட்டதே இல்லை” என செய்தியாளர்களிடம் பேசிய நகரசபை உறுப்பினர் Brad Bradford கூறினார்.
Chris Alexander-ரின் அரசியல் செயல்பாடுகள் Toronto-வின் விழுமியங்களுக்கு பொருந்தாதவை எனவும் நகர முதல்வர் வேட்பாளர் Brad Bradford கூறினார்.
கனடாவில் “Donald Trump பாணி அரசியலை” கொண்டு வந்ததாக குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் Chris Alexander “இப்பதவிக்கு தகுதியற்றவர்” என வர்ணித்த Brad Bradford, அவரது பிரச்சாரத்தை வெறும் “சுய விளம்பர முயற்சி” அல்லது “அடுத்த வேலைக்கான ஒரு ஒத்திகை” என கூறி நிராகரித்தார்.
அதேவேளை தேர்தல் குறித்து விவாதிக்க இது நேரமல்ல என கூறிய Olivia Chow, தனது தலைமை குறித்த Chris Alexander விமர்சனத்திற்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்து, தேர்தல் பிரச்சாரம் குறித்து பேசுவதை தவிர்த்தார்.
நேருக்கு நேர் மோதலில் Brad Bradford-டை விட Olivia Chow முன்னிலை வகிப்பார் என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கும் நிலையில், Chris Alexander இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
புதனன்று வெளியிடப்பட்ட புதிய கருத்துக் கணிப்பொன்று, முடிவெடுத்த வாக்காளர்களிடையே Brad Bradford-டின் ஆதரவு 41 சதவீதமாகவும், Olivia Chow-வின் ஆதரவு 49 சதவீதமாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற அனைவரிடையேயும், Brad Bradford-க்கு 33 சதவீத ஆதரவு இருந்த நிலையில், Olivia Chow 39 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தார்.
இதில் 8 சதவீதத்தினர் வேறு ஒரு வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறினார்.
அதேவேளையில் 20 சதவீதத்தினர் வாக்களிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தனர்.
இந்தக் கருத்து கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போது Chris Alexander தேர்தலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் Ajax-Pickering நாடாளுமன்ற உறுப்பினரான Chris Alexander, 2013 முதல் 2015 வரை கனடாவின் குடியுரிமை, குடிவரவுத் துறை அமைச்சராக இருந்தார்.
அவர் 2003 முதல் 2005 வரை Afghanistan நாட்டுக்கான கனடாவின் தூதராகவும் பணியாற்றினார்.
புதன் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, Toronto நகர முதல்வர் பதவிக்காக 33 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
