கனடியரின் படுகொலைக்கு உத்தரவிட்ட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடியரான Hardeep Singh Nijjar படுகொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக உலகளாவிய ரீதியில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
June 2023-இல், British Columbia-வில் சீக்கிய ஆதரவாளர் Hardeep Singh Nijjar படுகொலை செய்யப்பட்டார்.
Surrey நகரில் உள்ள சீக்கியர்களுக்கான வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் என அழைக்கப்படும் தனிச் சீக்கிய அரசுக்கான ஆதரவாளராக Hardeep Singh Nijjar இருந்தார்.
இந்தப் படுகொலைக்கு இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்ற கும்பல் உறுப்பினர் Lawrence Bishnoi, அவரது கூட்டாளியாக கருதப்படும் Satinderjeet Singh ஆகியோர் உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை உட்பட, இந்தியாவைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்கள் இழைத்த குற்றச்செயல்கள் தொடர்பாக உலகளாவிய ரீதியில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இதில் மூவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 37 சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அச்சுறுத்துவதற்கு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Lawrence Bishnoi-க்கு எதிரான குற்றப்பத்திரிகையில் Hardeep Singh Nijjar ‘H. S. N’ என்ற முதலெழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவர் கொல்லப்பட்ட திகதி, அது தொடர்பான அறியப்பட்ட சூழல்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
November 2023-இல், பிரபல இந்திய நடிகர், பாடகர் ஒருவரின் Vancouver இல்லத்தில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு Lawrence Bishnoi பொறுப்பேற்றதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.
Lawrence Bishnoi குற்ற கும்பல் போதைப்பொருள் கடத்தல் மூலம் தங்களது குற்ற நடவடிக்கைகளுக்கு நிதி சேகரித்தாக கூறப்படுகிறது.
November 2024-இல், அமெரிக்காவின் California-வில் இடைமறிக்கப்பட்டதும் கனடாவுக்கு அனுப்பப்படவிருந்ததுமான 49 KG cocaine போதைப்பொருள், கடத்தலை Lawrence Bishnoi, Satinderjeet Singh ஆகியோர் மேற்பார்வையிட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
Operation Hard Ball நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 1,000 KG cocaine போதைப்பொருள், பல துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளதாக சட்ட அமுலாக்க துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Hardeep Singh Nijjar படுகொலை கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவரது மரணத்தில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அதை ஆதரிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் கனடிய Justin Trudeau வெளியிட்ட கருத்து இரு நாட்டுக்கு இடையில் இராஜதந்திர உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்திய அரசாங்கத்தை அந்தக் கொலையுடன் தொடர்புபடுத்தும் நம்பகமான உளவுத் தகவல் இருப்பதாக 2023 September-ரில் Justin Trudeau நாடாளுமன்ற அவையில் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு கனடிய அரசாங்கம் Bishnoi குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
