Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith விரைவில் தனது பதவியில் இருந்து விலகுகிறார்.
இவர் 2015 முதல் Toronto நகரில் Beaches–East York தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
Scarborough Southwest தொகுதியின் Ontario Liberal கட்சி வேட்பாளர் தெரிவில் Nate Erskine-Smith கடந்த வார விடுமுறையில் தோல்வியடைந்தார்.
இருந்த போதிலும் கோடை விடுமுறைக்காக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கலைக்கப்படும் June 19-ஆம் திகதிக்கு முன்னர் தனது பதவியில் இருந்து விலகும் தனது திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் April மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர், பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான 172 ஆசனங்களும் சில குறைவான ஆசனங்களை மத்திய Liberal அரசாங்கம் பெற்றிருந்தது.
Conservative கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட NDP கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி மாற்றத்தின் தொடர்ச்சியான இடைத்தேர்தல் வெற்றிகளுடன் கடந்த மாத நிலவரப்படி Liberal கட்சிக்கு 174 ஆசனங்கள் உள்ளன.
இது மிகச் சிறிய பெரும்பான்மையாக உள்ள நிலையில், இவரது பதவி விலகல் மத்திய Liberal கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கச் செய்கிறது.
Nate Erskine-Smith தனது பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பின்னர், அவருக்குப் பதிலாக ஒரு புதிய நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கு ஒரு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள Nate Erskine-Smith, Scarborough Southwest இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையில் ஒரு ஆசனத்தை வெற்றி பெற முயன்றார்.
ஆனால், சனிக்கிழமை (09) நடைபெற்ற நியமனத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் Ahsanul Hafiz-இடம் வேட்பாளர் நியமனத்தை இழந்த அவர் தற்போது அந்த முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
மாகாண அரசியலில் முழுமையாக ஈடுபட போவதாகவும், Scarborough Southwest தொகுதிக்கான இடைத் தேர்தலை Ontario முதல்வர் அறிவித்தவுடன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் கடந்த February மாதம் Nate Erskine-Smith கூறியிருந்தார்.
ஆனால் இந்த வேட்பாளர் நியமனத் தேர்தலை தொடர்ந்து, Ontario Liberal கட்சிக்கு தலைமை தாங்க விரும்புகிறாரா என்பது குறித்து அவர் உறுதியான பதில் எதையும் தெரிவிக்கவில்லை.
வார இறுதிக்கு முன்னர் இருந்ததை விட, Ontario Liberal பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு தற்போது “மிகவும் குறைவு” என Nate Erskine-Smith செவ்வாய்க்கிழமை (12) ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
