தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

தமிழரின் நாடு கடத்தல் உத்தரவில் கனடிய நீதித்துறை தலையீடு!

நீதித்துறைக்கும் நாடாளுமன்ற அரசியலுக்கும் இடையில் தள்ளாடும் தமிழரின் எதிர்காலம்

தமிழ் அகதி கோரிக்கையாளரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு கனடிய நீதித்துறை இந்த வாரம் தடை விதித்துள்ளது.

2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த 492 தமிழர்களில்  ஒருவரான அகதி கோரிக்கையாளர் குகதீஸ்வரன் துரைசிங்கம் அடுத்த வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்தார். இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக 2026 April 15 அன்று ஆஜராகுமாறு 2026 March 11-ஆம் திகதி குகதீஸ்வரன் துரைசிங்கத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இலங்கை குடிமகனான இவர், கனடாவில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கு தடைவிதிக்கக் கோரி மத்திய நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்.

தான் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதையை எதிர்கொள்ள நேரிடும் ஆபத்து குறித்து ஒருபோதும் முறையான மதிப்பீடு செய்யப்படவில்லை என அவர் தனது தடை உத்தரவு விண்ணப்பத்தில் வலியுறுத்தியிருந்தார். காணொளி  மூலம் கடந்த வியாழக்கிழமை (02) நடைபெற்ற விசாரணையில் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மத்திய நீதிமன்ற நீதிபதி Sébastien Grammond, குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் நாடு கடத்தல் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

MV Sun Sea கப்பல் அகதி கோரிக்கையாளர் குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் நாடு கடத்தும் உத்தரவுக்கு கனடிய நீதித்துறை இந்த வாரம் தடை விதித்துள்ளது!

குகதீஸ்வரன் துரைசிங்கம் விண்ணப்பதாரராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை அமைச்சு எதிர்வாதியாகவும் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. விண்ணப்பதாரி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதைக்கு உள்ளாகும் அபாயத்திற்கு ஆளாவார் என நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என நீதிபதி Sébastien Grammond செவ்வாய்க்கிழமை (07) வெளியான தனது முடிவில் தெளிவாக குறிப்பிட்டார். அவரது குற்றப் பின்னணியை கருத்தில் கொண்டாலும், குடிவரவுச் சட்டங்களை உடனடியாக அமுல்படுத்துவதில் உள்ள பொது நலனை விட, நாடு கடத்தப்பட்டால் எதிர்கொள்ளும் அபாயத்தை முறையாக மதிப்பிடுவதில் உள்ள ஆர்வம் மேலோங்கி நிற்கிறது எனவும் நீதிபதி தனது முடிவில் சுட்டிக் காட்டினார் .

நீதிபதி Sébastien Grammond

இலங்கையில்  சித்திரவதை பரவலாக உள்ள ஒரு சர்வாதிகார ஆட்சி  இன்றும் நீடிக்கிறது: கனடிய மத்திய நீதிமன்ற நீதிபதி Sébastien Grammond

இலங்கையில்  சித்திரவதை பரவலாக உள்ள ஒரு சர்வாதிகார ஆட்சி  இன்றும் நீடிப்பதாகவும், தமிழர்களுக்கு எதிரான பாகுபாடுகள் கணிசமான அளவில் தொடர்ந்து நிலவுவதாகவும் தனது முடிவில் நீதிபதி மேலும் குறிப்பிட்டார். கனடாவின் எல்லை சேவைகள் முகமையகம் (CBSA) 2024-இல் குகதீஸ்வரன் துரைசிங்கத்தை கனடாவில் இருந்து வெளியேற்ற முயற்சித்திருந்தது. அவரை கைது செய்த CBSA, கனடாவில் இருந்து வெளியேற்றுவதற்கான திகதியையும் நிர்ணயித்தது. ஆனால் அவர் இலங்கைக்குத் திரும்பும்போது அவருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து முறையாக மதிப்பிடப்படாததால், அவரை நாடு கடத்துவதற்கு மத்திய நீதிமன்ற நீதிபதி Paul Favel தடை விதித்திருந்தார்.

எல்லை முகவர்கள், மத்திய காவல்துறையை மேற்பார்வையிடும் பொதுமக்கள் பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை அமைச்சு, கடந்த பதினாறு ஆண்டுகளாக இவரை நாடு கடத்த முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவைக்கு Scarborough-Guildwood-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தலைமை தாங்குகிறார். இந்த நாடு கடத்தல் விடயத்தில் தலையிட போவதில்லை என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி ஏற்கனவே தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க நீதிமன்றமே சிறந்த இடம் என கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கூறியிருந்தார். “இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்” என பதிலளித்த அமைச்சர், “இது குறித்து முடிவெடுப்பதை நீதிமன்றங்களிடமே விட்டுவிடுகிறேன்,” எனவும் கூறினார். ஆனாலும் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை ஹரி ஆனந்தசங்கரி ஒப்புக் கொண்டார்.

MV Sun Sea கப்பல்

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையில் உயிர் தப்பி, தமிழ் அகதிகளால் நிரம்பிய ஒரு பழுதடைந்த கப்பலில் கனடாவை வந்தடைந்தார் குகதீஸ்வரன் துரைசிங்கம். சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியான ஒரு பயணத்தின் துன்பமிக்க உதாரணம் அவர். British Colombia கடற்கரையில் கனடிய அதிகாரிகள் தங்களைக் காப்பாற்ற வருவதைக் கண்டபோது, ​​அது தமக்கு தந்த நிம்மதியை பயணிகள் பலரும் பலமுறை கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் விரைவில் சிறைத் தண்டனையை எதிர்கொண்டதுடன், கனடிய அரசாங்கத்தால் “சந்தேகத்திற்கிடமானவர்கள், மனிதக் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள்” என முத்திரை குத்தப்பட்டனர்.

கனடா, இலங்கை அதிகாரிகள் MV Sun Sea கப்பலை விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்தும் பகிரங்கமாகத் தொடர்புபடுத்தி வந்துள்ளனர்?

2012-இல் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் நீண்டதும் சிக்கலானதும்மான குடிபெயர்வு வரலாறு. இவர் போன்றவர்களின் நாடு கடத்தல் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் அவரது அகதிக் கோரிக்கையில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படவோ அல்லது மதிப்பீடு செய்யப்படவோ இல்லை. இது தொடர்பாக தொடர்ந்து முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் பல மட்ட அரசு ஊழியர்களினால் நிராகரிக்கப்பட்டன. மனநல சவால்கள், மனச்சோர்வு, மதுப்பழக்கம் ஆகியவற்றுடன் வாழ்ந்தவர் குகதீஸ்வரன் துரைசிங்கம். அவரது சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை என நிராகரிக்கப்பட்டன. பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னரும், அவர் தனது பாதுகாப்பிற்காக இன்னும் போராடி வருகிறார். கனடா, இலங்கை அதிகாரிகள் MV Sun Sea கப்பலை விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்தும் பகிரங்கமாகத் தொடர்புபடுத்தி வந்துள்ளனர். MV Sun Sea கப்பல் பயணிகளில், அகதி கோரிக்கைகள் நிலுவையில் உள்ளவர்களின் கதியை முன்கூட்டியே கணிப்பதற்கான சிறந்த காரணி, உண்மையில் திருப்பி அனுப்பப்பட்டவர்களின் கதியே ஆகும். 2013-இல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட MV Sun Sea கப்பலின் இரண்டு பயணிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல் போனார்.

தற்போது குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் எதிர்காலம் கனடிய நீதித்துறைக்கும் நாடாளுமன்ற அரசியலுக்கும் இடையில் தள்ளாடுகிறது. கனடிய நீதித்துறை இந்த வாரம் வழங்கியுள்ள நாடு கடத்தல் தடை உத்தரவு நம்பிக்கையின் கீற்றுகளை அளித்தாலும், கனடாவில் குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் நீண்டகால எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

Olivia Chow: Toronto நகரசபையில் அரசியல் மாற்றம்?

Lankathas Pathmanathan

பாகம் 1 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan

Leave a Comment