கனடாவுக்கு எதிராக 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார்.
அண்மையில் சீன அரசாங்கத்துடன் கனடா செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால், அமெரிக்காவுக்குள் செல்லும் அனைத்து கனடிய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump சனிக்கிழமை (24) எச்சரித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் Donald Trump வெள்ளை மாளிகைக்கு திரும்பியதிலிருந்து அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக உள்ளன.
வர்த்தகம் தொடர்பான சர்ச்சைகள், பிரதமர் Mark Carney அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஒழுங்கில் ஒரு “பிளவு” இருப்பதாக கண்டனம் செய்தது என இந்தப் பதட்டம் தொடர்கிறது.
கடந்த வாரம் Mark Carney சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு வரிகளைக் குறைப்பதற்கான “பூர்வாங்க ஆனால் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்” ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என Donald Trump எச்சரித்தார்.
இரு நாட்டின் தலைவர்களும் இடையில் சமீபத்திய நாட்களில் கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது.
உலகப் பொருளாதார மன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) உரையாற்றிய Mark Carney, அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஒழுங்கில் ஏற்பட்ட “பிளவு” குறித்து வெளிப்படையான விமர்சனத்தை வெளியிட்டார்.
அமெரிக்கத் தலைவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரது கருத்து சர்வதேச விவகாரங்களில் Donald Trump-பின் சீர்குலைக்கும் செல்வாக்கைக் குறிப்பதாக பரவலாக நோக்கப்பட்டது.
மறுதினம் தனது உரையில் Donald Trump கனடிய பிரதமரின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
பின்னர் பிரதமரை தனது “Board of Peace” குழுவில் இணைய விடுத்த அழைப்பை மீளப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
LJI Reporter ரம்யா சேது
