Liberal அரசாங்கம் எப்போதும் தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக அரசாங்க கொறடா தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அரசாங்க கொறடா Mark Gerretsen தெரிவித்தார்.
பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe Champagne இந்த மாத ஆரம்பத்தில் சமர்பித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை (17) நடைபெறவுள்ளது.
இதில் Liberal அரசாங்கம் தோல்வியடைந்தால் மீண்டும் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு உள்ளது.
அரசாங்கம் அனைத்து எதிர்கட்சிகளையும் அணுகி, வரவு செலவுத் திட்டம் குறித்த விமர்சனங்களை கேட்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக CBC தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் Mark Gerretsen ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார்.
திங்களன்று ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வாக்களித்தால், சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றவும், தேர்தலைத் தவிர்க்கவும் எதிர்க்கட்சியின் ஆதரவு தேவையானதாக இருக்கும்.
இந்த நிலையில் கனடியர்கள் தேர்தலை விரும்புகிறார்கள் என தான் நம்பவில்லை எனவும், ஆனால் தனது கட்சி அதற்கு தயாராக இருக்கும் எனவும் Mark Gerretsen கூறினார்.
திங்கள் மாலை நடைபெறும் வாக்கெடுப்பில் அனைத்து Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என அவர் உறுதிப்படுத்தினார்.
Liberal அரசாங்கம் சபாநாயகருடன் 170 ஆசனங்களை கொண்டுள்ளது.
திங்கட்கிழமை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வாக்களித்தால், சிறுபான்மை Liberal அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 172 வாக்குகள் தேவையாகும்.
வாக்குகள் சமநிலையாக இருந்தால் மட்டுமே சபாநாயகர் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் பங்கேற்பார்.
இந்த வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, Conservative தலைவர் Pierre Poilievre இதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
தனது கட்சி இந்த தீர்மானத்தை ஏகமனதாக எதிர்க்கும் என அவர் கடந்த வாரம் மீண்டும் கூறி இருந்தார்.
இதேபோல், தனது கட்சி வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்காது என Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கூறினார்.
அனைத்து Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த வாரம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இந்த நிலையில் ஏழு ஆசனங்களுடன் NDP அதிகார சமநிலையை தக்கவைத்துள்ளது.
NDP எவ்வாறு வாக்களிக்கும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
தனது விமர்சனங்களுக்கு மத்தியில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May அண்மையில் தெரிவித்திருந்தார்.
அவரது ஆதரவு வாக்கு, வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையை 170 ஆக அதிகரிக்கும்.
இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற Liberal அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மேலும் ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு தேவையாகும்.
பின்னர் சபாநாயகர் வாக்களித்து சமநிலையை முறித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம்.
இவற்றுக்கு மாற்றாக, சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்தால், அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
ஆனால் எந்தவொரு கட்சியும் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருப்பதில் பகிரங்கமாக ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
