எதிர்க்கட்சி தலைவருக்கு கடந்தது ஒரு மோசமான வாரமாகும்.
இரண்டு நாட்களில் ஒரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி மாறியது, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியது, Pierre Poilievre-வின் தலைமை குறித்து கேள்விகள் எழுகின்றன. சிறுபான்மை Liberal அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, அதை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடவேண்டிய வாரத்தில் Conservative கட்சி, அதன் தலைவர் Pierre Poilievre எதிர்பார்த்த தலைப்புச் செய்திகள் இவை அல்ல.
கனடிய அரசியலில் மறக்கமுடியாத வாரமாக அமைந்த இரண்டு சந்திப்புகளை பிரதமர் நடத்தினார்.
வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே, கனடிய அரசியலில் மறக்கமுடியாத வாரமாக அமைந்த இரண்டு சந்திப்புகளை பிரதமர் நடத்தினார். ஒன்று Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont உடனான சந்திப்பாகும். இரண்டாவது Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux உடனான சந்திப்பாகும்.
பிரதமர் Mark Carney-யின் முதலாவது வரவு செலவுத் திட்டம் மீதான Pierre Poilievre-வின் விமர்சனங்களை Conservative நாடாளுமன்ற குழுவில் இருந்து இருவர் பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது மறைத்தது. இது January மாதத்தில் அவரது கட்சியின் மாநாட்டிற்கு முன்னதாக, Pierre Poilievre-வின் தலைமையின் மீது கவனத்தைத் திருப்பியது. Chris d’Entremont கட்சி தாவியதும், Matt Jeneroux திடீரென முன்கூட்டியே ஓய்வு பெறுவதாக அறிவித்ததும், Mark Carney அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் பரிசுகளாகும்.
Atlantic கனடாவைச் சேர்ந்த ஒரு Conservative நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி மாறி Liberal கட்சியில் இணைவது, வழக்கமான அரசியல் அல்ல. அது Conservative கட்சிக்கு விடுக்கப்பட்ட ஒருவகை சிவப்பு எச்சரிக்கையாகும். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இதேபோன்ற நகர்வை எத்தனிப்பதாக வதந்தி பரவி, பின்னர் அவர் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகி செல்ல முடிவு செய்வது, தற்செயல் நிகழ்வு அல்ல. Conservative நாடாளுமன்ற குழுவுக்கும் உள்ள அழுத்தம் ஒரு முறிவு நிலையை எட்டியுள்ளது என்பதை இது காட்டுகிறது.
கடந்த பொதுத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், Conservative கட்சி எதிர்கொள்ளும் சவாலின் உச்சக்கட்ட அறிகுறியாக இது இருக்கலாம் என கட்சியுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். பொதுத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்த Pierre Poilievre எப்போதும் இறுதி வெற்றி இலக்கை நோக்கி தம்மை அழைத்துச் செல்ல மாட்டார் என்ற நியாயமான கவலை கட்சியினர் மத்தியில் உள்ளது.
Pierre Poilievre அண்மைக் காலத்தில் அவரது கட்சியிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொளகிறார். எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்றுவதில் பல Conservative உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது. இது அடுத்த பொதுத் தேர்தல் வரும்போது Pierre Poilievre-வுக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சிக்குள் இப்போது நடப்பது சாதாரண கொந்தளிப்பு அல்ல.
கனடிய அரசியல் ஒருபோதும் மனம் தளர்ந்தவர்களுக்கு ஏற்றதாக இருந்ததில்லை. அனைத்து கட்சியிலும் பிளவுகள், தலைமைப் போட்டிகள், குழப்பமான தருணங்கள் அரங்கேறும். ஆனால் Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சிக்குள் இப்போது நடப்பது சாதாரண கொந்தளிப்பு அல்ல. அரசியலில் கட்சி மாறுவது எப்போதும் நடைபெற்று வருவதுதான். மக்கள் பரிணமிப்பதும், தொகுதிகள் மாறுவதும், கொள்கைகள் கட்சிக் கோட்பாடுகளுடன் மோதுவதும் நடைபெறுவதுதான். ஆனால் தனிப்பட்ட தேர்வுக்கும் வற்புறுத்தல், பயம், அச்சுறுத்தல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
தனது கட்சி தாவல் செய்தி வெளியான உடன், அலுவலகத்திற்குள் நுழைந்து Conservative கட்சித் தலைமை கூச்சலிட்டதாக Chris d’Entremont முன்வைத்துள்ள குற்றச்சாட்டு சாதாரணமாக கடந்து செல்ல முடியாதது. இதில் Chris d’Entremont தொடர்ந்தும் Conservative கட்சியில் இருக்க வேண்டும் என Conservative நாடாளுமன்றத் தலைவர் Andrew Scheer, கொறடா Chris Warkentin ஆகியோர் வற்புறுத்தியதாக, எச்சரித்ததாக தெரியவருகிறது. Chris d’Entremont முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை Conservative கட்சி மறுத்துள்ளது.
தந்திரோபாயங்கள் Pierre Poilievre தலைமையிலான Conservative உள் வட்டத்திற்கு புதியவை அல்ல?
இது போன்ற தந்திரோபாயங்கள் Pierre Poilievre தலைமையிலான Conservative உள் வட்டத்திற்கு புதியவை அல்ல என்கிறது தகவல் அறிந்த வட்டாரம். இந்த விடயத்தில் அதிருப்தி பல ஆண்டுகளாகக் கொந்தளித்த நிலையில் இருந்த ஒன்றுதான். பிரச்சார களத்தில் மிரட்டல் உட்பட கட்டுப்பாட்டில் வெறி கொண்ட தலைமை குறித்து Conservative தரப்பு பல தடவை கிசுகிசுத்துள்ளது. வரவு செலவுத் திட்ட வாரத்தில் இந்த கிசுகிசுக்கள் நிஜமானது.
ஆனாலும் Chris d’Entremont நடைமுறைப்படுத்திய கட்சி மாற்றம், Conservative கட்சியில் குழப்பம், அதிருப்தி குறித்த கேள்விகளை தூண்டியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் Matt Jeneroux அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த போது தான் அவை மேலும் தீவிரமடைந்தன. தேர்தல் ஒன்றை எதிர்கொண்டு வெற்றி அடைந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஆறு மாதங்களில் பதவி விலகுவதாக – வெளிப்படையான காரணங்கள் எதுவும் இல்லாமல் – அறிவிப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல. குறிப்பாக அடுத்த இலையுதிர் காலத்தில் பதவி விலகுவதற்கு ஒரு சிறுபான்மை அரசின் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர் வரவு செலவுத் திட்ட வாக்களிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பதில்லை.
மேலும் Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்களா?
இப்போது Conservative கட்சி எதிர்கொள்ளும் கேள்வி, மேலும் Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்களா என்பது தான்? கட்சியை விட்டு வெளியேறும் முடிவு குறித்து ஆலோசித்து கொண்டிருந்தபோது, ”மூன்று அல்லது நான்கு” Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது குறித்து ஆலோசித்து வருவதாக Chris d’Entremont கூறினார்.
ஆனாலும் வாரத்தின் நடுப்பதியில் அரசியல் சலசலப்பை விரைவாகத் தணிக்க Conservative கட்சியின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் முன்னாள் Conservative பிரச்சார மேலாளர் Jenni Byrne முக்கிய பங்கு வகித்தார். இந்த உரையாடல்களில் கடுமையான அழுத்தம் இருந்ததாக Conservative வட்டாரங்கள் கூறுகின்றன.
Conservative கட்சிக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வாரம் சபை கூடவில்லை என்பது எதிர்க்கட்சிக்கு கொஞ்சம் ஓய்வை கொடுக்கலாம் – மாறாக இது ஆபத்தானதாகவும் மாறலாம். Pierre Poilievre தலைமை குறித்து சுமார் பத்துக்கும் அதிகமான Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரைமறைவில் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். இந்த உள் அழுத்தங்கள் வரும் நாட்களிலும், வாரங்களிலும் நீங்குமா அல்லது அவை Pierre Poilievre தலைமையில் மேலும் விரிசலை ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவரது தலைமைத்துவம் குறித்து புத்தாண்டில் Conservative கட்சி வாக்களிக்க உள்ளது. அதுவரை அவரால் தலைமையில் நீடிக்க முடியுமா என்பது தான் இன்று கேள்வியாகும்.
