சிறுபான்மை Liberal அரசாங்கத்துடன் இணைந்ததன் மூலம் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont பலரை ஆச்சரியப்படுத்தினார். இது பலரும் எதிர்பாராத ஒரு கட்சி தாவலாகும். Mark Carney அரசின் வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சி மாறும் முடிவை அறிவித்த Chris d’Entremont, நாடாளுமன்றத்தின் இயக்கவியலேயே மாற்றியுள்ளார்.
November 4 வரை, பெரும்பான்மைக்கு மூன்று வாக்குகள் குறைந்த நிலையில் இருந்த சிறுபான்மை Liberal அரசாங்கம் இவரது பதவி மாற்றத்தின் பின்னர் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த கட்சி மாற்றத்தின் பின்னர் பெரும்பான்மைக்கு தேவையான ஆசனங்களின் எண்ணிக்கையை இரண்டாக குறைந்துள்ளது. தவிரவும் பெரும்பான்மையை பெறுவதற்கு Mark Carney அரசாங்கம் ஒரு படி அண்மித்துள்ளது என்பதை இது கட்டியம் கூறுகிறது.
இந்த அதிரடியை Conservative கட்சி எதிர்பார்க்கவில்லை. தலைமைத்துவ மதிப்பாய்விற்கு சில மாதங்களுக்கு முன்னர் இதன் மூலம் கட்சி தலைவர் Pierre Poilievre மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. தவிரவும் வேறு சில கட்சி மாற்றங்கள் சத்தியம் என்ற பேச்சுக்கு இது இடம் கொடுத்துள்ளது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இந்த மாத இறுதிக்குள் நடைபெறுவதற்கு முன்னர், கட்சி மாறுவது குறித்து அல்லது சுயேச்சை உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் அமர்வது குறித்து பல Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் Liberal கட்சி கலந்துரையாடி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் Liberal கட்சியில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக அரசியல் மட்டத்தில் பல வாரங்களாக பேசப்பட்ட வதந்திகளை ஊதி பெரிதாகியுள்ளது. வேறு யாரை வேட்டையாட முயற்சிக்கிறார்கள் என்பதை Liberal கட்சியினர் கூற மாட்டார்கள். இன்றைய நிலையில் தேவை இன்னமும் இரண்டு வாக்குகள் என்ற நிலையில் Liberal கட்சி வரவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் இரண்டு என்ற அந்த மந்திரம் இலக்கத்தை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது தெரிகிறது. தனது Liberal அரசாங்கத்தில் இணைய, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை பிரதமர் Mark Carney எந்த வகையிலும் மறுக்கவில்லை.
Pierre Poilievre-வின் பொருந்தாத தலைமைத்துவ பாணியே கட்சியை விட்டு வெளியேறும் தனது முடிவுக்குக் காரணமாக அமைந்ததாக Chris d’Entremont கூறினார். ஆசிய நாடுகளை போலல்லாமல் இது போன்ற கட்சி தாவல்கள் கனடாவில் ஆச்சரியமானதாக இருந்தாலும் அது ஒன்றும் அரிதானதல்ல. கனடாவில் Floor-crossing எனப்படும் கட்சி மாற்றம் அடிக்கடி நடப்பதில்லை, ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய, பிளவுபடுத்தும் நடைமுறையாகும்.
1867-ஆம் ஆண்டு ஏற்பட்ட கனடா கூட்டமைப்புக்கு (Confederation) பின்னர் 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியுள்ளனர் என்றால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 1867 முதல் தங்கள் அரசியல் சார்பை மாற்றிக்கொண்ட 307 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 158 பேர் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறினர். மேலும் 149 பேர் கட்சி மாறுவதற்கு முன்னர் அல்லது பின்னர் சுயேச்சை உறுப்பினர்களாக இருந்தனர்.
கட்சி மாற்றத்திற்கும் Nova Scotia மாகாணத்திற்கும் ஏதோ தொடர்பு போல, கட்சி மாறியதாக முதலாவதாக அறியப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் Stewart Campbell ஆவார். இப்போது Conservative கட்சியில் இருந்து Liberal பக்கம் தாவிய Chris d’Entremont போல, Stewart Campbell ஒரு Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினராவார் என்பது குறிப்பிடத்தக்கது. Sir John A. Macdonald தலைமையிலான Liberal-Conservative கட்சியில் இணைவதற்காக Anti-Confederates கட்சியை விட்டு விலகியவர் Stewart Campbell. இதற்கு “பரிசாக” பின்னர் ஒரு சமூக நிகழ்வில் அவர் மீது முட்டைகள் வீசப்பட்டது தனி வரலாறு.
கடந்த 25 ஆண்டுகளில், தேர்தல்களுக்கு இடையில் கட்சிகளை மாற்றிய 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததாக நாடாளுமன்ற நூலகத் தரவு காட்டுகிறது. இவை அநேகமாக ஒரு கட்சியின் தலைமை மாற்றத்தை தொடர்ந்து அல்லது சில சமயங்களில் கட்சி முழுமையாக மாற்றப்பட்ட பின்னர் நடைபெறுவது வழமையாகும்.
கட்சியின் தலைமை மாற்றத்தின் எதிரொலியாக அரங்கேறிய ஒரு கட்சி மாற்றம் இது. September 2000; Quebec நாடாளுமன்ற உறுப்பினர்களான David Price மற்றும் Diane St-Jacques ஆகியோர் Progressive Conservative கட்சியை விட்டு வெளியேறி Liberal கட்சியில் இணைந்தனர். இடைத் தேர்தலில் Joe Clark வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திற்கு Progressive Conservative கட்சியின் தலைவராக திரும்பிய பின்னர் இந்த கட்சி மாற்றத்தை அவர்கள் அறிவித்தனர். தங்கள் தொகுதிகள் Bloc Québécois கட்சியிடம் பறிபோவதை தடுப்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினர். இதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கட்சியை விட்டு வெளியேறி சுயேச்சையாக செயல்பட ஆரம்பித்த முன்னாள் Progressive Conservative நாடாளுமன்ற உறுப்பினர் André Harvey, அந்த மாத இறுதியில் Liberal கட்சியில் இணைந்தார்.
2003-ஆம் ஆண்டு; Progressive Conservative கட்சியை Canadian Alliance கட்சியுடன் இணைத்து இன்று நாம் அறியும் Conservative கட்சியை உருவாக்கிய வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்குப் பின்னர் – Progressive Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Scott Brison கட்சி மாறி Liberal பக்கம் சென்றார். இந்த மாற்றம் தனது தனிப்பட்ட மதிப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதாக அவர் கூறினார். கனடாவின் முதல் வெளிப்படையான ஓரினச் சேர்க்கையாளரான அமைச்சர் இவராவார். ஒரே பாலினத்தவர்களுக்கு எதிராக மாறிவந்த Conservative கட்சியின் நிலைப்பாடு இந்த கட்சி மாற்றத்திற்கு காரணமாக அப்போது பேசப்பட்டது நினைவில் உள்ளது.
2004-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், புதிய Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட Belinda Stronach, 2005-ஆம் ஆண்டில் Liberal கட்சியில் இணைந்தார். அப்போதைய Conservative தலைவர் Stephen Harper நாட்டின் அனைத்துப் பகுதிகளின் தேவைகளையும் புரிந்தவராக இல்லை என அவர் கூறியிருந்தார். Conservative கட்சியின் துணைத் தலைவர் Peter MacKay-உடன் Belinda Stronach ஒரு உறவைக் கொண்டிருந்தார். 2005-ஆம் ஆண்டு Liberal கட்சியில் Belinda Stronach இணைந்த போது அந்த உறவு முடிவுக்கு வந்தது. அவர்களின் உறவு பகிரங்கமானது, ஆனால் அவர்களின் பிரிவை ஒரு சட்டவிரோத விவகாரமாக அல்ல, அரசியல் நடவடிக்கையின் விளைவாக அனைவரும் விவரித்தனர். அவர்களின் உறவின் பொது இயல்பு நிலை சில சமயங்களில் “Prom King and Prom Queen of Ottawa” என்ற செல்லப் பெயர் பெற்றது தனிக்கதை.
2006-ஆம் ஆண்டு; Liberal கட்சியின் சார்பாக தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு வாரங்களில் Conservative கட்சிக்குத் தாவினார் David Emerson. பிரதமர் Stephen Harper-ரின் முதல் அமைச்சரவையில் David Emerson ஒரு அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது கட்சி மாறல் நடவடிக்கை நெறிமுறைகள் ஆணையர் அலுவலகத்தின் விசாரணைக்கு வழிவகுத்தது. இதில் David Emerson அல்லது Stephen Harper எந்த விதிகளையும் மீறவில்லை என நெறிமுறைகள் ஆணையர் கண்டறிந்தார்.
Leona Alleslev, 2018-ஆம் ஆண்டு Liberal கட்சியிலிருந்து விலகி Conservative கட்சியில் இணைந்தார். பொருளாதாரம், வரி சீர்திருத்தம், வெளியுறவு, வர்த்தகம், இராணுவ செலவினங்களைக் கையாள்வதை மேற்கோள் காட்டி கனடா எதிர்கொள்ளும் சில சவால்களை Liberal அரசாங்கம் போதுமான அளவு நிவர்த்தி செய்யவில்லை என Leona Alleslev கூறினார்.
2021-ஆம் ஆண்டில், Atlantic கனடாவில் பசுமை கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வெற்றி பெற்ற Fredericton நாடாளுமன்ற உறுப்பினர் Jenica Atwin, கட்சியில் இருந்து விலகி Liberal கட்சியில் இணைந்தார். அந்த நேரத்தில் பசுமைக் கட்சியில் அதிக கவனச் சிதறல்கள் இருந்ததாகவும், மேலும் ஆதரவான, ஒத்துழைப்புடன் கூடிய சூழலில் பணியாற்ற விரும்புவதாகவும் Jenica Atwin கூறினார்.
Ontario நாடாளுமன்ற உறுப்பினர் Eve Adams, 2015-ஆம் ஆண்டு Liberal கட்சியில் இணைந்தார். “அரசியல் ரீதியாகவோ அல்லது அறிவுபூர்வமாகவோ” தொடர்ந்து Conservative கட்சியின் ஒரு பகுதியாக தான் உணரவில்லை என அவர் கூறினார்.
கட்சி மாறுவது குறித்து 2018-ஆம் ஆண்டு ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. கனடியர்கள் இந்த நடைமுறை குறித்து பிளவுபட்டுள்ளனர் என்பதை அந்த கருத்துக்கணிப்பு எடுத்துரைத்தது. தேர்தல்களுக்கு இடையில் அரசியல்வாதிகள் ஒரு கட்சியை விட்டு வெளியேறி மற்றொரு கட்சியில் சேர அனுமதிக்கப்படக்கூடாது என பத்து கனடியர்களில் நான்கு பேர் நம்புவதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்தது. அதே எண்ணிக்கையிலானவர்கள் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும் கூறினர். கட்சி மாற்றுவதற்கு முன்னர், ஒருவர் பதவியில் இருந்து விலகி இடைத் தேர்தல்களில் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கின்றனர். இந்த நடைமுறையை ஆதரித்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைகளாக தங்கள் பதவிக் காலத்தை தொடர அனுமதிப்பதையே விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
ஒரு வேட்பாளருக்கு பதிலாக ஒரு கட்சிக்கோ அல்லது கட்சித் தலைவருக்கோ வாக்களித்த தொகுதி மக்கள், தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியை விட்டு வெளியேறத் தேர்வு செய்யும் போது கோபமடையலாம். கட்சி மாறும் அரசியல்வாதிகள் அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்ப்பதும் அசாதாரணமானது அல்ல. இந்த வகையான நகர்வுகள் ஒருவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது. இவை கட்சி தாவல் என்பதை தாண்டி, காட்சி மாற்றமாக நோக்கப்பட வேண்டியது. தங்கள் வளர்ந்த – ஒரு வகையில் தங்களை வளர்த்த கட்சி இப்போது இல்லை என்ற எண்ணம் வரும் போது இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன.
கட்சி மாற்றம் அரசியலில் நெறிமுறையான நகர்வா என்ற கேள்வி உள்ளது, ஆனால் அது சட்டபூர்வமானது!
