தேசியம்
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

கனடா தினத்திற்குள் கனேடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது சாத்தியமா?

COVID பெரும் தொற்றின் ஒரு வருட காலத்தில் கனேடிய அரசியல் தலைவர்களிடம் கோரப்பட்ட பிரதான விடயம் ஒன்றுதான்: தொற்றுநோயை நிர்வகித்தல்.
ஆனாலும் COVID ஒரு பெரும் தொற்றாக அறிவிக்கப்பட்ட ஒரு வருட காலத்தில் G7 நாடுகளில் மிகவும் மோசமான பற்றாக்குறை, மோசமான வேலையற்ற விகிதம், மோசமான தடுப்பூசி வழங்கல் விகிதம் ஆகியவற்றை கொண்ட நாடாக கனடா தற்போது உள்ளது.

கனடாவில் சுமார் 37.7 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 31.5 மில்லியன் பேர் 16 வயதுக்கு மேற்பட்டவர்களாகவுள்ளனர். இவர்கள் அனைவரும் COVID தடுப்பூசிகளுக்கு தகுதியானவர்கள். இப்போது கனேடிய அரசாங்கத்தின் சவாலாக இருக்கும் விடயம் இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதுதான்.

இந்தப் பெரும் தொற்றின் ஆரம்பம் முதல் தடுப்பூசி கொள்வனவு குறித்த விடயத்தில் கனேடிய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தியது. உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்த நாடுகளின் பட்டியலில் கனடா முன்னிலையும் வகித்தது.

ஆனாலும் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் அந்த ஒப்பந்தங்கள் தடுப்பூசி விநியோகமாக கனடாவை வந்தடைவதற்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது – அந்த இடைவெளிச் சிக்கலைத் தான் கனடா தற்போது எதிர்கொள்கின்றது.

இதுவரையிலும் கனடாவில் நான்கு தடுப்பூசிகள் பாவனைக்காக Helath கனடாவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Moderna, Pfizer-BioNTech, AstraZeneca, Johnson & Johnson ஆகிய தடுப்பூசிகளுக்கு கனடாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனடா தினத்திற்கு முன்னர் COVID தடுப்பூசியைப் பெற விரும்பும் கனேடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவது சாத்தியமா என்ற கேள்விதான் இப்போது கனடாவில் பிரதானமானதாக உள்ளது.

தொற்றின் மூன்றாவது அலையை தற்போது கனடா எதிர்கொள்கின்றது. நாளாந்தம் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தொற்றின் புதிய திரிபுகள் காரணமாக முதல் இரண்டு அலைகளை விட மூன்றாவது அலையின் பாதிப்பு அதிகரிக்கும் என்பது சுகாதார அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

இதனால் மாகாணங்களினதும் பிராந்தியங்களினதும் தடுப்பூசி வழங்கும் பணியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஆனாலும் தடுப்பூசிகள் எவ்வளவு விரைவாக கனேடியர்களை சென்றடையும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன.

இந்த (March) மாதத்தின் 31ஆம் தித்திக்குள் ஆறு மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுவதற்குப் பதிலாக, கனடா எட்டு மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இதில் Pfizerடமிருந்து மேலும் 1.5 மில்லியன் தடுப்பூசிகளும் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட AstraZenecaவிடமிருந்து 500,000 தடுப்பூசிகளும் பெற்றுக்கொள்ளப்படும்.

கொள்முதல் அமைச்சரான அனிதா ஆனந்த் கனடா June மாத இறுதிக்குள் குறைந்தது 36.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது – September மாத இறுதிக்குள் மொத்தம் 117.9 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறும் என உறுதியளித்தார்.

இவற்றுக்கு மத்தியில் இதுவரையில் Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்ட நான்கு நிறுவனங்கள் Pfizer, Moderna, AstraZeneca , Johnson & Johnson என்பதையும் – இப்போது அவை 16வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்குவதற்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் வைத்திருப்பது அவசியமானது.

கனடாவின் தேசிய நோய்த்தடுப்பு பிரச்சாரத்தின் அடுத்த கட்டமான Mass Vaccination நடைபெறவுள்ளது. இந்த (March) மாதத்தில் 3.5 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்துள்ள நிலையில், இந்த தடுப்பூசி வழங்கும் கட்டம் ஆரம்பிக்கவுள்ளது.
கனடா தினத்திற்குள் கனடியர்கள் (16 வயதிற்கு மேல் உள்ள) அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது சாத்தியமா என்பதை விட இந்த இலக்கை அடைவதற்கு கனடா என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பொருத்தமானதாகும்.

கனடாவில் சுமார் 31.5 மில்லியன் பேர் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் சிலர் ஏற்கனவே தமது தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். தற்பொழுது உள்ள நிலவிரத்தின்படி, நாள் ஒன்றிற்கு 263,000 பேருக்கு, அல்லது ஒரு மணி நேரத்திற்கு 11,000 பேருக்கு தடுப்பூசி வழக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை பின்பற்றினால் கனடா தினத்திற்குள் 16வயதிற்கு மேல் உள்ள கனேடியர்கள் அனைவரும் தடுப்பூசியை பெறுவார்கள்.
இது அசாத்தியமாக தோன்றினாலும் சாத்தியபடக்கூடிய ஒன்றே.

அமெரிக்கா நாளாந்தம் 2.1 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கி வருகிறது. கனடாவின் மக்கள் தொகை அமெரிக்காவின் மக்கள் தொகையில் சுமார் 11.5 சதவிகிதம் ஆகும், எனவே அமெரிக்காவின் வேகத்துடன் பொருந்தினால், கனடாவால் ஒரு நாளைக்கு 241,500 பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும் என கனடா அரசு தெரிவிக்கிறது.

இந்த திட்டத்தை அடைய ஒரு நாளைக்கு இன்னும் 21,500 தடுப்பூசிகள் தேவைப்படும். கனடாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசம். அவை அரசின் முன்னுரிமை பட்டியலுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் முதலில் வழங்கப்படும். தேசிய, மாகாண, பிராந்திய பொது சுகாதார அதிகாரிகளால் தடுப்பூசி பெற பரிந்துரைக்கப்படும் அனைவருக்கும் அவை வழங்கப்படும்.

கனடாவில் உள்ள அனைவருக்குமே இது பொருந்தும். குடியுரிமை பெறாதவர்களுக்கும் 16 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு, Pfizer தடுப்பூசியும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு Moderna, AstraZeneca தடுப்பூசியும் அனைத்து கனேடிய ஆயுதப்படையினருக்கு (வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட) Johnson & Johnson தடுப்பூசியும் வழங்கப்படும். இதுவே கனேடிய அரசாங்கத்தின் திட்டம்.
இதனை கனடா தினத்திற்குள் சாத்தியப்படுத்துவது கனேடிய அரசாங்கத்தின் முன் உள்ள சவாலாகும்!

இலங்கதாஸ் பத்மநாதன்

(தேசியம் சஞ்சிகையின் March 2021 பதிப்பின் முகப்பு கட்டுரை)

Related posts

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

Lankathas Pathmanathan

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja

கனடிய  நாடாளுமன்றத்தில் 100 பெண்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment