September 18, 2024
தேசியம்
Uncategorized கட்டுரைகள்

முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள்: செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்கள்!

கடந்த ஆண்டில் (2020) The Canadian Press செய்தி நிறுவனத்தினால் செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்களாக (Newsmaker) முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

கனடாவை COVID-19 தொற்று ஆக்கிரமித்தவுடன், செவிலியர்கள், பலசரக்கு கடை பணியாளர்கள் போன்றோர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் பெரும் ஆபத்து விளைவிக்கும் தொழிலில் இருந்ததால், ”அத்தியாவசியப் பணி” (essential work) என்பதன் அர்த்தம் தெளிவாகத் தொடங்கியது.

தங்கள் அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாமல் உயிரிழக்கும் நபர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டனர் சுகாதாரப் பணியாளர்கள். மூடப்பட்ட எல்லைகளைக் கடந்து உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தினர் பலசரக்கு விநியோகஸ்தர்கள்.

The Canadian Press செய்தி நிறுவனத்தினால் கனடாவிலுள்ள செய்தி ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு வாக்கெடுப்பில் 2020 ஆம் ஆண்டின் செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்களாக (Newsmaker) முன்கள பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

COVID குறித்து இன்று நமக்குத் தெரிந்த விடயங்கள் தெரிந்திராத ஆரம்ப காலகட்டத்திலிருந்தே முன்கள பணியாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டனர், என தனது வாக்கை பதிவு செய்த போது Toronto Star பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியர் Jodi Isenberg கூறினார்.

”இந்த போராட்டத்தில் ஏனையவர்களை விட அவர்கள் தான் அதிகம் தியாகங்களைச் செய்தார்கள். தமது குடும்பங்களை விட்டுப் பிரிந்தார்கள். சில சமயங்களில் மரணத்தின் வாசலில் நின்றிருந்தவர்கள் பார்த்த கடைசி முகமாக இருந்தார்கள். நாம் வழங்கக்கூடிய அனைத்துப் பாராட்டுக்களுக்கும் அவர்கள் தகுதியானவர்கள்” என்கிறார் Isenberg.

“நம்மில் பலர் நமது கடமைகளை வீட்டிலிருந்து செய்தோம்; முன்கள பணியாளர்கள் களத்தில் இறங்கிச் செய்தார்கள்,” என CTV Calgary பிரிவின் நிர்வாக ஆசிரியர் Dawn Walton தெரிவித்தார்.

வரலாற்று ரீதியாக, ஆண்டின் Newsmaker பெரும்பாலும் ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு விளையாட்டு வீரராக இருப்பார். ஆனால் COVID-19 இம்முறை செய்திச் சுழலில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்த ஆண்டு முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூன்று முன்னணித் தலைவர்கள் வாக்கெடுப்பில் முன்நிறுத்தப்பட்டனர்: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி மருத்துவர் Theresa Tam, Quebecகின் பொது சுகாதார பணிப்பாளர் மருத்துவர் Horacio Arruda, British Colombiaவின் மாகாண சுகாதார அதிகாரி மருத்துவர் Bonnie Henry ஆகியோரே அவர்களாவர்.

COVID தொற்றுநோய் முன்களப் பணியாளர்களின் அத்தியாவசியப் பங்கை மாத்திரமல்லாமல், அவர்களுக்கு ஆதரவான விடயங்கள் இடம்பெறாமையையும் வெளிக்காட்டியது. நோயின் பேரழிவை அதிகம் எதிர்கொண்ட நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் காணப்பட்ட பணியாளர் பற்றாக்குறை முதல் நோயாளர்களுக்கான கொடுப்பனவு, சிறுவர் பராமரிப்பு திட்டங்கள் வரை மாற்றங்களை ஏற்படுத்த COVID-19 வினையூக்கியாக இருந்து வருகின்றது.

தமது அங்கத்தவர்களில், பலசரக்கு விநியோகப் பணியாளர்கள் முதல் உணவு பதப்படுத்துனர்கள் வரை பெருந்தொற்றின் பெரும்பகுதியை தமது பாதுகாப்புக் குறித்த கவலைகளுடனேயே கழித்ததாக United Food and Commercial Workers Canadaவின் தலைவர் Paul Meinema குறிப்பிட்டார். அவர்கள் எப்போதுமே ஒரு முக்கிய பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். ஆனால், அவற்றுக்கு இவ்வாறான பொது அங்கீகாரம் கிடைத்ததில்லை,” என அவர் கூறினார்.

“பலர் ஒவ்வொரு வாரமும் பலசரக்கு அங்காடிக்கு செல்கின்றனர். ஆனால், அவர்கள் அடுக்கத்தில் உணவுப் பொருட்களை வைத்து அவற்றை சோதிப்பவரைப் பற்றியோ, புதிய இறைச்சியும் உற்பத்திப் பொருட்களும் இருப்பதை உறுதி செய்யும் நபரைப் பற்றியோ உண்மையில் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை,” என Meinema கூறினார். இந்த பணிகளின் முக்கியத்துவத்தை COVID வௌிப்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கம் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என நம்புகின்ற, தொற்று ஊதியம் போன்ற (pandemic pay) தற்காலிக நடவடிக்கைகளின் மூலம் அந்த பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என நினைப்பதாகவும், இந்த வேலைகளின் முக்கியத்துவத்தை தொடர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூக மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும்” என Meinema குறிப்பிட்டார்.

எப்போதுமே கவனிக்கப்படாதிருந்த, திரை மறைவில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரையும் பெருந்தொற்று அடையாளம் காட்டியுள்ளது. Optilab-McGill பல்கலைக்கழக சுகாதார மையத்தின் மருத்துவ நிர்வாக இயக்குநராக Montreal மற்றும் Abitibi-Temiscamingue பகுதிகளில் உள்ள 15 சோதனை ஆய்வகங்களை மேற்பார்வையிடும் Enzo Caprio, பெருந்தொற்று தனது ஊழியர்கள் மேல் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார். “நாங்கள் செய்வது எவ்வளவு முக்கியமான பணி என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.

கோடையில் நோயாளர் எண்ணிக்கை குறைந்து வருவதால், சில அத்தியாவசியப் பணியாளர்கள் தற்காலிக ஓய்வு கிடைத்திருப்பதாகக் கருதினாலும் கூட, தொடர்ச்சியாகவும் விரைவாகவும் சோதனைகள் இடம்பெற்று வரும் ஆய்வுக்கூடங்களில் அவ்வாறான நிலைப்பாடு இல்லை, என Caprio தெரிவித்தார். பொதுவாக ஆய்வுக்கூடங்களில் சோதனை திறனை அதிகரிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால், COVID-19 சோதனைகளுக்காக அந்த மாற்றங்கள் சில மாதங்களிலேயே இடம்பெற்றன.

கடந்த March மாதம் முதல் ஆய்வுக்கூடங்களில் 500,000 வரையான சோதனைகள் இடம்பெற்றுள்ளன, என அவர் கூறினார். “March முதல், நானே ஒவ்வொரு நாளும் 13 மணிநேரங்கள் பணியாற்றி வருகிறேன். எனது ஊழியர்கள் ஓய்வின்றிப் பணியாற்றுகிறார்கள். நாங்கள் செய்வது எவ்வளவு முக்கியமான பணி என்பதை அறிந்து அவர்களாகவே முன்வந்து இதைச் செய்கிறார்கள்,” என அவர் மேலும் கூறினார்.

Vancouver நகரில் உள்ள St. Paul மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர் Sophie Gabiniewicz, தனது 25 ஆண்டுகால வாழ்க்கையில் இது மிகவும் கடினமான ஆண்டுகளில் ஒன்று என தெரிவித்தார். இரவு நேரங்களில் பாத்திரங்களில் தட்டி ஒலியெழுப்பும் செயற்பாட்டின் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்த குடும்பங்கள் நன்றியுணர்வோடு ஒன்றிணைந்த நிகழ்வினைத் தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் பொதுமக்களின் அங்கீகாரம் ஊக்கமளித்துள்ளது.

“ஒரு நாள் நான் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த ஒலி ஒரு அலையாக வருவதை நான் கேட்டேன். அதை அவர்கள் எனக்காகத் தான் செய்கிறார்கள்,” என அறிந்துகொண்டேன் என அவர் கூறினார். “அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது.

அடிவானில் நம்பிக்கை ஒளிக்கீற்றை தடுப்பூசி பிரதிபலித்தாலும் கூட, அதே தொழிலாளர்கள் பலரும் இரண்டாவது அலையிலும் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். மக்கள் இன்னும் எங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தையும் நாங்கள் ஒன்றாகக் கடந்து வருவோம்.” என Gabiniewicz கூறினார்.

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புவது நின்றிருக்கலாம். ஆனால், அத்தியாவசியப் பணியாளர்கள் மீதான கனேடியர்களின் நன்றியுணர்வு குறைந்திருக்காது. “முற்றிலும் கொடூரமான ஆண்டில், நமது அன்றாட கதாநாயகர்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்களோ, இசைக்கலைஞர்களோ அரசியல்வாதிகளோ அல்ல, முன்கள பணியாளர்கள் தான் என்பதை மக்கள் நினைவிற்கொண்டுள்ளனர்,” என Penticton Herald பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் James Miller எழுதியுள்ளார்.

“அவர்கள் தமது வாழ்வை அன்றாடம் அபாயத்திற்குள் வைத்துப் பணியாற்றியமை நினைவுகூரத்தக்கது.” இதே போன்றதொரு கூற்றை Regina Leader-Post பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் Tim Switzer குறிப்பிட்டுள்ளார். ஏனைய அதிகாரிகள் இந்த COVID-19 போராட்டத்தில் பொது முகங்களாக தென்பட்டாலும், தளத்தில் இறங்கிப் போராடும் முன்கள பணியாளர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெருந்தொற்றினால் ஏதேனும் நன்மை ஏற்பட்டிருக்குமானால், அது இந்த முன்களப் பணியாளர்களை இனி எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது தான்.

சபரி கிருபாகரன்

(தேசியம் January 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Related posts

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Gaya Raja

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் பதவி துறப்பும் ஈழத்தமிழரும்

Lankathas Pathmanathan

Leave a Comment