தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

துருப்புச் சீட்டாகும் Khalid Usman

Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரம் மீண்டும் தமிழர்கள் வசம் வந்தடையும் ஒரு சாத்திய நிலை அண்மையில் தோன்றுகின்றது.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக இருப்பவர் Khalid Usman. தொழிமுறையில் ஒரு கணக்காளரான இவர், நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர்.

ஏழாம் வட்டாரமும் தமிழர்களும் 

2006ஆம் ஆண்டு November மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற நகரசபை தேர்தலில் Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினராக லோகன் கணபதி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கனடாவில் அரசியல் பதவி ஒன்றை வெற்றி பெற்ற முதலாவது தமிழராக லோகன் கணபதி வரலாற்றில் இடம் பிடித்தார்.

இந்த தேர்தலில் Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம், எட்டாம் வட்டாரங்கள் இணைந்த ஆங்கிலப் பொது கல்விச் சபை அறங்காவலர் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட நீதன் சண்  வெற்றியைத் தனதாக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கனடிய தமிழர்களின் அரசியல் பயணத்தில் Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரம் 2006ஆம் ஆண்டு முதல் முக்கிய இடம் பிடித்துள்ளது.

கனடிய தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் போட்டியிட்ட தேர்தலாக 2006ஆம் ஆண்டின் மாநகரசபைத் தேர்தல் களம் அமைந்திருந்தது. மொத்தம் பதினாறு தமிழ் வேட்பாளர்களின் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினராக போட்டியிட்ட லோகன் கணபதி 3088 வாக்குக்களுடன் 33.54 சதவீத விருப்பு வாக்குக்களைப் பெற்று இந்த தேர்தலை வெற்றி பெற்றிருந்தார். மொத்தம் எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தொகுதியில் மற்றுமோர் தமிழ் வேட்பாளரும் போட்டியிட்டிருந்தார். அதுவரை ஒரு நிதித் திட்டமிடல் ஆலோசகராக பணியாற்றிய, லோகன் கணபதியின் மனைவியான திருமதி. ராஜேஷ் லோகன் இந்த தொகுதியில் குடும்ப வைத்தியராக அன்று முதல் கடமையாற்றி வருகின்றார்.

இந்தத் தேர்தலில் (2006) வெற்றி பெற்ற இரண்டு தமிழ் வேட்பாளர்களும் Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரத்தில் வெற்றி பெற்றதை கவனத்தில் எடுப்பது அவசியம். இந்த வெற்றிக்கான பின்னணியில் இருந்தவர் ஒருவர்.

அவர் ஒரு தமிழர் அல்லாதவர் என்பது தான் முக்கியமானது.

இம்முறையும் (2022) மீண்டும் ஏழாம் வட்டாரம் தமிழர்கள் வசம் மீண்டும் வந்தடைய அதே நபர் காரணமாக இருக்கலாம்.

அவர் தான் Kalid Usman.

Kalid Usman பிடியில் ஏழாம் வட்டாரம்

தற்போது Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராக உள்ள Kalid Usman, முதலில் இந்தத் தொகுதியை 2003ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.

இவர் தமிழர்கள் இருவரின் வெற்றிக்கு காரணியாக 2006ஆம் ஆண்டு இருந்த விதம் குறித்து அறிவதும் இங்கே முக்கியமானதாகும்.

2003ம் ஆண்டு நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் Kalid Usman, 2913 வாக்குக்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்தப் பதவிக்கு அவரை எதிர்த்து ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட்டிருந்தார். அவரது பெயர் மோகன் நடராஜா. இந்த தொகுதியில் 2290 வாக்குக்களை அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதிக்கு போட்டியிடாமல் Markham பிரதேச சபை பதவிக்குப் போட்டியிட்டார் Kalid Usman. இதனால் ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் பதவிக்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.

இதேபோல் Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம், எட்டாம் வட்டாரங்கள் இணைந்த ஆங்கிலப் பொது கல்விச் சபை அறங்காவலர் உறுப்பினராக 2003ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தவர் Tessa Benn-Ireland. 2003ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே பதவிக்கு மேலும் இரு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் நீதன் சண் 36 சதவீதமான விருப்பு வாக்குக்களையும், குமார் நடராஜா 22 சதவீதமான விருப்பு வாக்குக்களையும் பெற்றிருந்தனர்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் Kalid Usman கைவிட்டுச் சென்ற ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடத் தீர்மானித்தார் Tessa Benn-Ireland. இதனால் பெரும் சவால்கள் எதுவும் இல்லாமல் நீதன் சாண் தனது ஆங்கிலப் பொதுக் கல்விச் சபை அறங்காவலர் பதவியை இலகுவாகவே வெற்றி பெற முடிந்தது.

மறுபுறம் Kalid Usman இல்லாத நகரசபை உறுப்பினர் பதவி போட்டியில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன.

ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் பதவியை 2003ஆம் ஆண்டில் Kalid Usman வெற்றி பெறுவதற்கு பெரிதும் உதவியது இதே தொகுதியில் அப்போது வைத்தியராக கடமையாற்றிய அவரது மனைவியின் செல்வாக்காகும். 2006ஆம் ஆண்டில் இந்த வைத்தியர் “கைராசி” லோகன் கணபதிக்கு பெருமளவில் உதவியிருந்ததை எவரும் மறக்க முடியாது.

அதேவேளை Kalid Usman கைவிட்டுச் சென்ற ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் பதவியை வெற்றி பெறுவதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய வேட்பாளர்கள் 2006ஆம் ஆண்டில் போட்டியிட்டிருந்தனர். இதனால் இந்தத் தொகுதியில் பலம் வாய்ந்த இஸ்லாமிய சமூகத்தின் வாக்கு வங்கி பிரிவடைய தமிழ் வேட்பாளரான லோகன் கணபதியின் வெற்றி உறுதியானது.

இவை அனைத்துக்கும் மத்தியில் Khalid Usman, 2006ஆம் ஆண்டு Markham பிரதேச சபை அபேட்சகராகப் போட்டியிட்டிருந்தார். இதே பதவிக்கு தமிழ் வேட்பாளரான கலாநிதி இலகு வி. இலகுப்பிள்ளை இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டிருந்தார். இந்தத் தேர்தலில் கலாநிதி இலகு வி. இலகுப்பிள்ளை 9.3 சதவீதமான விருப்ப வாக்குக்களைப் பெற Khalid Usman 9.98 சதவீத விருப்பு வாக்குக்களைப் பெற்றிருந்தார்.

இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களில் இவர்கள் இருவருமே தெற்காசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய இனத்தின் வாக்காளர்கள் பெருமளவில் வாழும் இந்தப் பிரதேசத்தில் கலாநிதி இலகு வி. இலகுப்பிள்ளையின் வெற்றி வாய்ப்பை Khalid Usman பறித்துச் சென்றாரா என்பதை அறிவது மிகவும் கடினம். ஆனாலும் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

இவ்வாறான பின்னணிகளைக் கொண்டு நோக்கையில் கனடிய அரசியலில் தமிழர்களில் பிரவேசத்திற்கு உதவியவராகவும், அரசியல் பிரவேசத்தை தடுத்தவராகவும் 2006ஆம் ஆண்டு முதல் நோக்கப்படுபவர் Khalid Usman.

இப்போது காலச்சக்கரம் மீண்டும் சுழல்கிறது!

அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளார் Khalid Usman. இதனால் அங்கு மீண்டும் ஒரு தமிழர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

இந்தச் சூழலை தமிழர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்களா?

கவனம் பெறும் ஏழாம் வட்டாரம்!

இதனால் மீண்டும் ஏழாம் வட்டாரம் தமிழர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த ஒரு தேர்தல் களமாக மாற்றமடைகிறது.

2006ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகளில் லோகன் கணபதி என்ற தமிழ் பிரிதிநியினால் நிரப்பட்ட இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினருக்கான ஆசனத்தை 2018ஆம் ஆண்டு Kalid Usman மீண்டும்  வெற்றி பெற்றார்.

2018ஆம் ஆண்டின் June மாதம் Markham Thornhill தொகுதியில் PC கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக லோகன் கணபதி வெற்றி பெற்ற நிலையில், ஏழாம் வட்டாரத்தில் மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டனர்.

இவர்களில் ஐவர் தமிழர்கள். இவர்களுக்குள் தோன்றிய போட்டியில் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து செல்ல இலகுவாக Kalid Usman மீண்டும் நகரசபை உறுப்பினரானார். இங்கு 2018ஆம் ஆண்டில் தமிழர்களின் வாக்குகள் பிரிவதற்கு காரணிகளாக இருந்தவர்களில் ஒருவர் லோகன் கணபதி என்றால் அது மிகையாகாது.

Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரத்தை தனது குடும்ப தொகுதியாக அவர் எண்ண ஆரம்பித்ததன் விளைவு தனது புதல்வியை தேர்தலில் ஈடுபடுத்துவது என்ற விபரீத முடிவில் வந்து நின்றது.

அவரது புதல்வியான கீர்த்திகா லோகன் கணபதி, தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பொது வெளியில் பெரிதும் அறியப்படாத ஒருவர். ஆனாலும் அவர் ஒரு நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

ஒரு வகையில் லோகன் கணபதி என்ற பதவி மோகம் கொண்ட ஒருவரினால் உருவாக்கப்பட்ட அரசியல் பொம்மை அவர்.

Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டார உறுப்பினர் பதவிற்கு ஜுவனீட்டா நாதன் இம்முறை போட்டியிடுகின்றார்.

இவர் மூன்று முறை  கல்விச் சபை உறுப்பினராக பதவி வகித்தவர்.

தேசிய Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு Markham Thornhill தொகுதியில் போட்டியிட எத்தனித்தவர். பின்னர் அதே தொகுதியில் Liberal கட்சியின் மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

2018ஆம் ஆண்டில் Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டார உறுப்பினர் பதவிற்கு போட்டியிடுவதற்கு தனது பெயரை பதிவு செய்து பின்னர் அதிலிருந்து பின்வாங்கியவர்.

இம்முறை ஒரே தமிழ் வேட்பாளராக களம் இறங்குகிறார்.

மீண்டும் தமிழர்களின் வாக்குகள் பிரியாமல் இருந்தால் இந்த தொகுதியை தமிழர்கள் வெற்றி பெறுவது சாத்தியமே!

 

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

ஸ்ரீலங்காவில் இன்னும் அமைதி இல்லை!

thesiyam

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

Gaya Raja

பாகம் 1 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

Leave a Comment