Latvia-வில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட கனடிய இராணுவ உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த வாரத்தில் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட கனடிய ஆயுதப்படை உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் Warrant அதிகாரி George Hohl என கனடிய இராணுவத்தினால் அடையாளம் காணப்பட்டார்.
இவர் Alberta-வின் 408 தந்திரோபாய உலங்குவானூர்தி படையின் வாகன தொழில்நுட்ப வல்லுநர் எனத் தெரியவருகிறது.
20 ஆண்டுகள் கனடிய ஆயுதப் படையில் பணியாற்றிய George Hohl, NATO பன்னாட்டு படைப்பிரிவு Latvia-விற்கு அனுப்பின கனடாவின் பங்களிப்பின் ஒரு பகுதியாக ஈடுபடுத்தப்பட்டார்.
இந்தப் படைப் பிரிவின் பங்களிப்பு ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கமாக கொண்டது.
செவ்வாய்க்கிழமை (02) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட George Hohl, வெள்ளிக்கிழமை (05) சடலமாக மீட்கப்பட்டார் என கனடிய இராணுவத்தினர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
இவரது மரணம் குறித்த எந்த தகவலையும் இராணுவத்தினர் வெளியிடவில்லை,
ஆனாலும் இந்த சம்பவம் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவ உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அதிகரித்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான எந்த அறிகுறியையும் ஏற்படுத்தவில்லை என கனடிய இராணுவம் கூறியது.
கனடியப் படைகளின் இராணுவ காவல்துறையின் ஆதரவுடன் Lativian அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கனடிய பிரதமர் Mark Carney இரங்கல் தெரிவித்தார்.
கடந்த மாதம் Latvia -விற்கு பயணித்த Mark Carney அங்கு தனது நேரத்தை செலவிட்ட படைப்பிரிவில் George Hohl அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
