கனடிய செயல்பாடுகளை மூட சீன தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
Hikvision Canada Inc. என்ற கண்காணிப்பு camera-களை தயாரிக்கும் சீன நிறுவனத்தை கனடாவில் அதன் வணிகத்தை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் Melanie Joly வெள்ளிக்கிழமை (27) இந்த உத்தரவு குறித்து அறிவித்தார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு ஒரு தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வின் விளைவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
பல கட்ட மதிப்பாய்வின் முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கனடாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினரால் வழங்கப்பட்ட தகவல்களையும் ஆதாரங்களையும் அரசாங்கம் கருத்தில் எடுத்ததாக அமைச்சர் Melanie Joly கூறினார்.
Hikvision கனடாவில் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என அரசாங்கம் முடிவு செய்தது என அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை “ஆழ்ந்த கவலையுடன்” எதிர்கொள்வதாக Hikvision கூறியது.
கனடாவிலிருந்து வெளியேற கோரும் உத்தரவின் முடிவை ஏற்கவில்லை எனவும் Hikvision தெரிவித்தது.
இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை என தெரிவித்த Hikvision பேச்சாளர், இது நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை இல்லாதது என நம்புவதாக தெரிவித்தார்.
“எங்கள் தொழில்நுட்பத்தை அதன் பாதுகாப்பு தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடுவதற்குப் பதிலாக, இந்த முடிவு எமது தாய் நிறுவனத்தின் இருப்பிடத்தால் நிர்ணயிக்கப்படுகிறது எனத் தெரிவித்த Hikvision, இது பரந்த புவிசார் அரசியல் பதட்டங்களையும் சீன நிறுவனங்களுக்கு எதிரான நியாயமற்ற நிலையையும் பிரதிபலிக்கிறது எனவும் கூறியது.
கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அமெரிக்காவால் பல தடைகள், கட்டுப்பாடுகளை Hikvision எதிர்கொண்டுள்ளது.