NATO செலவின இலக்கை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் கனடா எட்டும் என பிரதமர் Mark Carney அறிவித்தார்.
கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதமான NATO அளவுகோல் இலக்கை அடைய தனது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
கனடாவின் நடப்பு நிதியாண்டு March மாதம் நிறைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிவித்தல் வெளியானது.
இந்த இலக்கை அடைய கனடா பாதுகாப்பு செலவினங்களை பில்லியன் கணக்கான டாலர்களால் அதிகரிக்கும் என பிரதமர் திங்களன்று அறிவித்தார்.
NATO செலவின இலக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் எட்ட கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது Mark Carney உறுதியளித்திருந்தார்.
NATO செலவின இலக்கை எட்ட கனடா 2014-ஆம் ஆண்டு முதன் முதலில் இணங்கியது.
ஆனாலும் இதுவரை கனடா அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் பல ஆண்டுகளாக உறுப்பு நாடுகளிடமிருந்து கனடா அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
நெதர்லாந்தில் இந்த மாதம் நடைபெறும் NATO உச்சி மாநாட்டில் பாதுகாப்புச் செலவினங்கள் ஒரு மையப் புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டில் கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.45 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட்டதாக மிக சமீபத்திய NATO புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இன்றைய நிலையில், 32 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் NATO-வின் தற்போதைய இரண்டு சதவீத இலக்கை பூர்த்தி செய்கின்றன.