September 2, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் தமிழின அழிப்பு நினைவகம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி

தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது குறித்த ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த நினைவகம் திறக்கப்பட்டது.

இது தொடர்பில் தனது அதிருப்தியை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள கனடியத்  தூதுவர் Eric Walsh, புதன்கிழமை (14) ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட நிலையில்  தமிழின அழிப்பு நினைவகம் குறித்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கனடியத்  தூதுவர் Eric Walsh-சை சந்தித்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள், அதனை அடிப்படையாகக் கொண்ட தமிழின அழிப்பு நினைவகம் நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், ஸ்ரீலங்கா  அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தினார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்த ஒரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

கனடாவில் அரசியல் வாதிகள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாக ஸ்ரீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

August 2024-இல் நடைபெற்ற இந்த நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் பின்னர், இலங்கைக்கான கனடியத் தூதர் அழைக்கப்பட்டு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் விளக்கம் கோரப்பட்டது.

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வர்  Patrick Brown-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo வலியுறுத்தி இருந்தது கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Gaya Raja

Stanley Cup: இறுதி சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

Lankathas Pathmanathan

பிரதமரின் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment