Toronto பெரும்பாக பகுதியின் (GTA) பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (26) மாலை முதல் உறைபனி மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை (27) காலை வரையிலான காலப்பகுதியில் Toronto-வில் 15 நாட்களுக்கான மழை ஒரே நாளில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக Newmarket, Georgina, Pickering, Oshawa, தெற்கு Durham பிராந்தியம், Uxbridge – Beaverton, வடக்கு Durham பிராந்தியம், Vaughan, Richmond Hill – Markham, Caledon ஆகிய பகுதிகளில் வியாழன் மாலை முதல் உறைபனி மழை பெய்து சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் வெப்பநிலை உயர்ந்து, உறைபனி மழை சாதாரண மழையாக மாறும் எனவும் சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
கிழக்குக் கடற்கரை வழியாக நகரும் வானிலை அமைப்பு காரணமாக வியாழன் பிற்பகல் முதல் வெள்ளி காலை வரை கனமழை பெய்யும் எனவும், Toronto-வின் வடக்குப் பகுதிகளில் கலப்பு மழையும், வெள்ளியன்று இப்புயல் விலகும் போது இலேசான பனிப்பொழிவும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சனிக்கிழமை (28) சூரிய ஒளியும் மேகமூட்டமும் கலந்த வானிலையுடன் பலத்த காற்று, இலேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (29) மாலை யிலும், திங்கட்கிழமை (30) காலையிலும் மழை தொடர வாய்ப்புள்ள போதிலும், வார இறுதியில் சற்று வெப்பமான காற்று வீசுவதால் மழை உறைபனியாக மாறாது என எதிர்வு கூறப்படுகிறது.
