தேசியம்
உள் உணர்ந்து

நகராட்சித் தேர்தல்: அடையாள அரசியல் கடந்து தகுதிக்கே எம் வாக்கு!

நடைபெறவுள்ள நகரசபை தேர்தல் என்பது  Ontario மாகாணத்தில் வாழும் வாக்காளர்களின் அன்றாட வாழ்க்கையையும், ஏம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு ஜனநாயகக் கடமையாகும். சாலை வசதி, குடிநீர் விநியோகம், சுகாதாரம், பூங்காக்கள் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் நகர சபைகளின் பங்கே முதன்மையானது. உள்ளூர் மட்டத்திலான இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் எமது அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடியவை. எனவே, இந்த நகரசபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியமாகும்.

வாக்களிக்கும் போது ஒரு வேட்பாளரின் தகுதியையும், கொள்கைகளையும் மட்டுமே நாம் முதன்மையாகப் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பல நேரங்களில் மொழி அல்லது இன அடையாளங்களின் அடிப்படையில், “தமிழ் வேட்பாளர்” என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தகுதியற்ற ஒருவருக்கு வாக்கு செலுத்தும் போக்கு கனடாவில் பல்வேறு மட்ட அரசியலில் நிலவுகிறது. இதனால் நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். தமிழ் வேட்பாளராக இருப்பது பெருமைக்குரியதே, ஆனால் அதுமட்டுமே ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதிக்கான முழுமையான தகுதியாகிவிடாது. உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பது இறுதியில் எம் சமூகத்திற்கே பின்னடைவாக அமைந்துவிடும்.

எம் சமூகத்திற்குத் தேவைப்படுவது நேர்மை, தொலைநோக்குப் பார்வை, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் ஆகும். ஒரு வேட்பாளர் தமிழராக இல்லாவிட்டாலும், அவர் உங்கள் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, மக்களின் உரிமைகளுக்காகவும் உண்மையாக உழைக்கக்கூடியவராக இருந்தால், அவருக்கு வாக்களிப்பது சிறந்தது. தகுதி வாய்ந்த பிறமொழி வேட்பாளர்களை ஆதரிப்பது, எமது சமூகத்தின் மீதான பிற சமூகத்தவர்களின் மரியாதையையும் கூட்டுரிமையையும் பலப்படுத்தும் என்பது தான் நிதர்சனம்.

அடையாள அரசியலைக் கடந்து, வேட்பாளர்களின் முந்தைய சமூகப் பங்களிப்புகள், அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள், அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். நாம் தவறுதலாகத் தகுதியற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், அது எம் சமூகத்தின் பல ஆண்டு கால வளர்ச்சியைப் பாதிக்கும்..இங்கு எம் சமூகம் என்பது தமிழர் என்ற அடையாளத்தையும் தாண்டியது.

எனவே, குறுகிய இன உணர்வுக்கு அப்பாற்பட்டு, சமூகத்தின் ஒட்டுமொத்த நலனையும் எமது எதிர்காலச் சந்ததியினரின் தேவையையும் கருத்தில் கொண்டு, தகுதியான, சரியான வேட்பாளருக்கு வாக்களிப்போம். எமது ஒவ்வொரு வாக்கும் எமது நகரத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வலிமை கொண்டது என்பதை உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக ஜனநாயகக் கடமையாற்றுவோம்.

உள்ளுணர்ந்து
எண்ணமும், பதிப்புரையும்
தேசியம் October 2026 ஆசிரியர் தலையங்கம் ……

Related posts

$200 அவசரத் தேர்தல் – தேசியம் 2025 ஆசிரியர் தலையங்கம்

Lankathas Pathmanathan

கனடா: தடுப்பூசியை ஏற்றுக்கொள்வது அரசியல் இல்லை!

Gaya Raja

தமிழர் வாக்கு தமிழருக்கா?

Lankathas Pathmanathan

Leave a Comment