தமிழர் என்ற அடையாளத்திற்காக மாத்திரம் ஒருவருக்கு வாக்களிக்கலாமா என்ற கேள்வி பொதுத் தேர்தல் காலத்தில் மீண்டும் தலை தூக்குகிறது.
நடைபெறும் பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களில் ஜவர் Toronto பெருமைபாகத்தில் தமிழர்களின் வாக்கு கணிசமாக உள்ள தொகுதிகளில் களம் இறங்கியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் மூன்று, Conservative கட்சியின் சார்பில் இரண்டு, பசுமை கட்சியின் சார்பில் ஒன்று என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். Liberal கட்சியின் சார்பில் Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன், Conservative கட்சியின் சார்பில் Markham Stouffville தொகுதியின் நிரான் ஜெயநேசன், Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன், பசுமை கட்சியின் சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் சருன் பாலரஞ்சன் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளராவார்கள்.
இந்தப் பின்னணியில் தமிழர்கள் தமிழர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.
ஒரு தேர்தலில் எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்விக்கான அடிப்படைப் பதிலாக இருக்க வேண்டியது: எந்த கட்சி (அல்லது வேட்பாளர்) உங்கள் அரசியல் அபிலாஷைகளை சிறந்த முறையில் பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ(அல்லதுபடுத்துகிறாரோ), அந்தக் கட்சிக்கு (அல்லது வேட்பாளருக்கு) வாக்களிப்பது அடிப்படையில் சிறந்த முடிவாக இருக்கும்.
ஆனாலும் தமிழர்களைப் பொறுத்தவரையில் “குற்ற உணர்வு வாக்கெடுப்பு” என்ற விடயம் கடந்த சில தேர்தல்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது உங்கள் தொகுதியில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார் என்ற காரணத்திற்காக மாத்திரம், அவருக்காக வாக்களிக்கும் “குற்ற உணர்வு” நிலைக்குள் ஒருவரை அழுத்திப் பிடிக்கும் புதிய போக்கை கடந்த சில தேர்தல்களில் அவதானிக்க முடிகிறது. இதை வேட்பாளர்கள், அவர் தம் ஆதரவாளர்கள், அவர்களுக்கு ஆதரவான தமிழர் அமைப்புகள், ஏன் கட்சிகளே “ஊக்குவிக்கும்” நிலைதான் நடைமுறையில் உள்ளது.
இது எந்த வகையிலும் அரோக்கியமற்ற ஒரு படிமுறையாகும்!
ஒருவர் தமிழர் என்ற காரணத்திற்காக வாக்களிப்பது என்பது; ஒருவர் உறவினர் என்ற காரணத்திற்காக வாக்களிப்பதற்கு சமமானது.
நாட்டின் தேவை, தொகுதியின் தேவை, கட்சியின் நிலைப்பாடு, வேட்பாளரின் தகமை, வழங்கப்படும் உறுதி மொழிகள், இன்றைய அரசியல் கள நிலை என நீளும் பட்டியலில் இறுதியில் இடம்பிடிக்க வேண்டியது – தமிழருக்காக தமிழர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையாகும். ஆனாலும் ஆச்சரியகரமாக இது பட்டியலில் முதலிடம் பிடிப்பது கவலைக்கிடமானது!
“தமிழர்கள் தமிழருக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும்!” என்பது தாயக அரசியலில் ஒரு விவாதமாகலாம்- ஆனால் பல்லின கலாச்சாரம் கொண்ட நாட்டில் இது அவசியமற்றது – ஆபத்தானது.
Donald Trump என்ற பொது அச்சுறுத்தலின் நிழலில் கனடியர்கள் இந்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் – அந்த பொது அச்சுறுத்தலின் அடிப்படையில் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இதில் தமிழர் வாக்கு தமிழருக்கு என்ற “உணர்ச்சியின் அடிப்படையிலான உணர்வின்”வெளிப்பாடு எவருக்கும் உதவாது!
கனடியராக முதலில் வாக்களிப்போம் – பொதுவில் தகுந்த வேட்பாளருக்கு வாக்களிப்போம். அந்த வேட்பாளர் தமிழராக இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை – அவர் தமிழராக இருந்தால் மகிழ்ச்சியே!
தேசியம் April ஆசிரியர் தலையங்கம்
உள்ளுணர்ந்து