Stelco தொழிலாளர்களின் பணிநீக்க விவகாரத்தில், கனடிய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தொழில்சாலையின் அமெரிக்க உரிமையாளரான Cleveland-Cliffs நிறுவனம் கனடிய வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க தவறினால், அந்நிறுவனத்தின் கனடிய சொத்துக்களைக் கட்டாயமாகப் பறிமுதல் செய்து விற்க நேரிடும் என மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடிய தொழில்துறை அமைச்சர் Mélanie Joly இந்த இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Toronto-வில் உள்ள Canadian Club-பில் வெள்ளிக்கிழமை (16) உரையாற்றிய அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
Cleveland-Cliffs நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வர்த்தக வரிகளுக்கு ஆதரவாகப் பேசி வருவதை அமைச்சர் தனது உரையில் சாடினார்.
இந்த விடயத்தில் எங்களின் மூலோபாயத் தொழில்துறை திறனைப் பாதுகாக்கவும், கனடியர்களின் வேலைகளைத் தக்கவைக்கவும் சட்டப் புத்தகத்தில் உள்ள அனைத்து வழிகளையும், அதிகாரங்களையும் நாங்கள் பயன்படுத்துவோம் என Mélanie Joly மேலும் கூறினார்,
Stelco வேலைவாய்ப்புகளை கனடாவுக்கு உள்ளேயே வைத்திருக்க தவறினால் தங்களின் கனடிய சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.
Hamilton நகரில் 500 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக Stelco அண்மையில் அறிவித்தது.
இது வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் அளித்த சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை முற்றிலும் மீறுவதாக கனடிய அரசாங்கம் வாதிடுகிறது.
இந்த விடயத்தில் கனடிய மத்திய அரசின் அதிரடி அச்சுறுத்தலுக்கு Cleveland-Cliffs நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Lourenco Goncalves மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதை ஒரு வணிக ரீதியான முடிவு என குறிப்பிட்ட அவர், அமைச்சர் Mélanie Joly விடுக்கும் அச்சுறுத்தல்கலை கண்டித்தார்.
இதில் நீதிமன்றத்திற்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் BNN Bloomberg ஊடகத்திற்கு அண்மையில் அளித்த பிரத்யேக பேட்டியில் Lourenco Goncalves தெரிவித்துள்ளார்.
கனடிய மத்திய அரசுக்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே இதில் காரசாரமான வார்த்தைப் போர் நீடித்து வந்தாலும், கடந்த சில தினங்களாக Hamilton Stelco தொழிற்சங்க ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
