கடமையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்யும் குற்றவாளிகளுக்கான தகுதிகாண் பிணை (Parole Eligibility) விதிமுறைகளைக் கடுமையாக்க Doug Ford பரிந்துரைத்துள்ளார்.
Ontario மாகாண முதல்வர் Doug Ford மத்திய அரசுக்கு இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரதமர் Mark Carney-க்கு இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை இந்த வாரம் Doug Ford அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில் குற்றவியல் சட்டத்தில் Doug Ford அதிரடி மாற்றத்தை வலியுறுத்துகின்றார்.
பிணைக்கால அதிகரிப்பு, காவல் துறையினருக்கான பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகள் இந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படும் எந்த ஒரு நபருக்கும், அவர் சிறையிலிருந்து முன்கூட்டியே தகுதிகாண் பிணையில் விடுதலை ஆவதற்கான கால அளவை கணிசமாக உயர்த்த வேண்டும் என Doug Ford கோரியுள்ளார்.
பொதுமக்களை காக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் Ontario முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் Belleville பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற காவல்துறையினர் நினைவு தின அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் Mark Carney, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோர், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் Ontario மாகாண முதல்வரின் அதிகாரப்பூர்வ கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
