கனடாவின் ஐந்து மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது
Ontario உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வியாழக்கிழமை (01) முதல் அதிகரிக்கிறது.
வாழ்க்கைச் செலவினம், பணவீக்கக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மாகாண அரசுகள் தங்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் 25 சதம் முதல் 40 சதம் வரை இந்த புதிய உயர்வை அமுல்படுத்தியுள்ளன.
Ontario மாகாணம் முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் 35 சதங்கள் உயர்த்தப்பட்டு, மணிக்கு $17.95 ஆக அதிகரித்துள்ளது.
இந்த உயர்வால் மாகாணத்தில் உள்ள சுமார் 7,00,000-க்கும் மேற்பட்ட அடிமட்ட தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என Ontario அரசு தெரிவித்துள்ளது
Prince Edward தீவில் (P.E.I.) குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு $17.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Nova Scotia மாகாணத்தில் புதிய ஊதிய வரம்பு மணிக்கு $17 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Manitoba மாகாணத்தில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு $16.40 ஆக அதிகரித்துள்ளது.
Saskatchewan மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு $15.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஐந்து மாகாணங்களின் புதிய அறிவிப்பின் மூலம், 2026-ஆம் ஆண்டில் கனடாவின் அநேக மாகாணங்களும் பிராந்தியங்களும் தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை ஒருமுறையாவது உயர்த்தி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த September மாத ஆரம்பத்தில் தனது புதிய ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்திய Nunavut பிராந்தியம், மணிக்கு $20 -க்கும் அதிகமான குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கி நாடளாவிய ரீதியில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, Alberta மாகாணம் கடந்த 2019-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தனது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவில்லை.
இதனால் தற்போதும் மணிக்கு $15 என்ற வரம்போடு கனடாவின் மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாகாணமாக Alberta பின்தங்கியுள்ளது.
