கனடிய பொருளாதார வளர்ச்சி July மாதம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது..
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது..
கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த போதிலும், July மாதத்தில் எவ்வித மாற்றமும் இன்றி பொருளாதாரம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, July மாதத்தில் சில துறைகள் கடுமையான சரிவைச் சந்தித்த போதிலும், ஏனைய சில துறைகளின் அதிரடி வளர்ச்சி பொருளாதாரத்தை எதிர்மறை நிலைக்கு செல்லாமல் தடுத்து நிலை நிறுத்தியுள்ளது:
July மாதத்தில் கட்டுமானத் துறை 1.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, தொடர்ச்சியாக நான்காவது மாதமாக முன்னேறியுள்ளது.
மின் உற்பத்தி, விநியோகத் துறை 1.7 சதவீதம் வளர்ச்சி கண்டு இந்த ஆண்டின் சிறந்த மாதத்தைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, உற்பத்தித் துறை நான்கு மாதங்களில் முதல் முறையாக 0.9 சதவீதம் சரிவை பதிவு செய்தது.
இந்த நிலையில் July மாத முடக்கம் கவலை அளித்தாலும், புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதல் கட்ட உத்தேச கணக்கீட்டின்படி, August மாதத்தில் பொருளாதாரம் மீண்டும் 0.2 சதவீதம் வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
October 28 அன்று கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகித அறிவித்தலை வெளியிடவுள்ள நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த இந்தத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
