British Colombia மாகாணத்தில் முதல் குடியினருக்கு சொந்தமான வரலாற்றுப் பூமியில், வெள்ளை இன தேசியவாதிகள் முன்னெடுத்த போராட்டத்தை பிரதமர் Mark Carney கடுமையாக கண்டித்தார்.
இந்த இனவெறிக்கு கனடாவில் இடமில்லை என Mark Carney தனது கண்டனத்தில் தெரிவித்தார்.
முதல் குடியினர் நிலத்தில் முகமூடி அணிந்த குழுவினரால் நடத்தப்பட்ட இந்தத் திடீர் பேரணி மிகவும் கோழைத்தனமானது, வெறுக்கத்தக்கது என தனது கண்டனத்தில் பிரதமர் சாடினார்.
இந்தப் போராட்டம் குறித்து RCMP தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமரின் கண்டனம் வெளியானது.
British Colombia மாகாணத்தில் முன்னாள் Kamloops குடியிருப்பு பாடசாலை அமைந்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் அருகில் இந்த போராட்டம் நிகழ்ந்துள்ளது.
இனவெறியை தூண்டும் வகையில் அமைந்த இந்தப் போராட்டம் குறித்து RCMP அதிகாரிகள் முறைப்படி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அத்துமீறல் போராட்டத்தை B.C. மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி கண்டித்தனர்.
புதன்கிழமை (30) ‘உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம்’ (National Day for Truth and Reconciliation) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
