கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்துள்ள புதிய வர்த்தக வரிகள் அவரது வர்த்தகப் போரில் எடுக்கப்பட்ட ஒரு தவறான கணக்கீடு என கனடிய பிரதமர் Mark Carney சாடியுள்ளார்.
தலைநகர் Ottawa-வில் நடைபெற்ற Liberal கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து கனடா வெளிநடப்பு செய்தது சரியான முடிவுதான் என Mark Carney நியாயப்படுத்தினார்.
அமெரிக்கா முன்வைத்த சில நிபந்தனைகள் கனடாவின் இறையாண்மையை பாதிப்பதாக இருந்ததால் அவற்றை ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தினார்.
அண்மையில் தனது ஐரோப்பியப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர், ஐரோப்பாவுடன் ஒரு புதிய கூட்டாட்சியை ஆரம்பிப்பதற்கான பணிகளை கனடிய அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளதாக Mark Carney தனது உரையில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நியாயமற்ற வரிகள் கனடிய தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் பாதித்தாலும், கனடியர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று கடப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா எப்போது நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதோ, அப்போது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கனடா திரும்பும் எனவும் பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
