பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal கட்சி திங்கட்கிழமை (31) நடைபெற்ற மூன்று மத்திய இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் Liberal கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்கிறது.
Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சியிடமிருந்து Quebec மாகாணத்தின் தொகுதி ஒன்றை Liberal கட்சி திங்கள் இரவு கைப்பற்றியது.
தவிரவும் Ontario, British Colombia ஆகிய மாகாணங்களில் உள்ள இரண்டு Liberal கோட்டைகளையும் தக்க வைத்துக் கொண்டு தனது பெரும்பான்மை அரசாங்கத்தை Mark Carney வலுப்படுத்தினார்.
Québec மாகாணத்தின் Chicoutimi-Le Fjord தொகுதியில், Conservative கட்சியிடமிருந்து Liberal கட்சி கைப்பற்றியது, இந்த இடைத் தேர்தலின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
அங்கு Liberal கட்சியின் வேட்பாளர் Daniel Gobeil வெற்றி பெற்றார்.
அவர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆளும் Liberal கட்சி, Ontario மாகாணத்தின் Beaches–East York, British Colombia மாகாணத்தின் North Vancouver-Capilano ஆகிய தொகுதிகளையும் எளிதாகத் தக்க வைத்துக் கொண்டது.
இதில் Beaches–East York தொகுதியில் Tanveer Shahnawaz, North Vancouver-Capilano தொகுதியில் Braeden Caley ஆகியோர் Liberal கட்சியின் சார்பில் வெற்றி பெற்றனர்.
இவர்களில் Tanveer Shahnawaz 55 சதவீதம் வரையிலான வாக்குகளையும், Braeden Caley 58 சதவீதம் வரையிலான வாக்குகளையும் பெற்றுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.
அண்மைய மாதங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான பதவி விலகல்களுக்கு பின்னர், இந்த இடைத் தேர்தல்களை Liberal கட்சி 170 ஆசனங்களுடன் எதிர்கொண்டது.
இந்த மூன்று இடைத்தேர்தல் வெற்றிகள் Liberal கட்சியின் ஆசன எண்ணிக்கையை மீண்டும் 173 ஆக உயர்த்தியுள்ளது.
இது Liberal கட்சி நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மை பலத்தை தக்க வைக்க தேவைப்படும் எண்ணிக்கையை விட ஒரு ஆசனம் அதிகமாகும்.
இந்த பெரும்பான்மை அரசாங்கத்துடன், Liberal கட்சியினர் எதிர்க்கட்சியினரால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் நிலை உள்ளது.
September 21 அன்று இலையுதிர் கால கூட்டத்தொடருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் சபை அமர்வுகளுக்கு திரும்பும் முக்கியமான தருணத்தில், இந்த பெரும்பான்மையை Liberal அரசாங்கம் மீண்டும் பெற்றுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெற்றது.
