Toronto-வில் வாடகை வீடுகளைக் கட்ட $2.7 பில்லியன் நிதியை கனடிய பிரதமர் உறுதியளிக்கிறார்.
ஆயிரக்கணக்கான புதிய வாடகை வீடுகளை Toronto-வில் கட்ட உதவ, $2.7 பில்லியன் முதலீடு செய்வதாகக் மத்திய அரசாங்கம் புதன்கிழமை (05) அறிவித்தது.
மத்திய அமைச்சர் Gregor Robertson, Toronto நகர முதல்வர் Olivia Chow ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் Mark Carney இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Toronto-வில் திட்டமிடப்பட்டுள்ள 18 வீட்டுத் திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும், இத்திட்டங்கள் மூலம் 5,600-க்கும் மேற்பட்ட வீடுகள் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இவற்றில் ஏறக்குறைய 2,000 வீடுகள் கட்டுப்படியான விலையில் அல்லது மிகக் குறைந்த விலையில் அமைய உள்ளன.
இந்த 18 திட்டங்களில் ஒன்பது, நகராட்சிக்குச் சொந்தமான நிலங்களில் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500-க்கும் மேற்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் முழு திட்டமும் March 2031-க்குள் “குறிப்பிடத்தக்க அளவிலான நிறைவை” எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முதலீட்டை Olivia Chow வரவேற்றார்.
