Peel பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரையிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை அமைகிறது.
“இந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன,” என் 17 இலட்சம் மக்கள் வசிக்கும் Peel பிராந்திய துணை காவல் துறைத் தலைவர் Nick Milinovich ஒப்புக் கொண்டார்.
அந்த அதிகரிப்புக்கான காரணம் கட்டாயப் பணம் பறித்தல், திட்டமிட்ட குற்றச் செயல்கள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் முற்றிலும் தொடர்புடையது என அவர் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், Mississauga, Brampton ஆகிய நகரங்களில் 103 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், Peel பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு நகரங்களில் 58 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
Peel பிராந்திய தெருக்களிலிருந்து துப்பாக்கிகளை அகற்றுவதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு வார இறுதி நாட்களில், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கொண்டுவரப்பட்ட மூன்று அல்லது நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவது வழக்கமாகும் என Nick Milinovich தெரிவித்தார்.
Peel பிராந்தியக் காவல்துறை தரவுகளின்படி, Mississauga, Brampton ஆகிய நகரங்களில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழையும் சம்பவங்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டை விட குறைந்திருந்தாலும், அவை தொடர்ந்து ஒரு சவாலாக நீடிப்பதாக தெரியவருகிறது.
2024-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், Peel பிராந்தியத்தில் 50 வீடுகளுக்குள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த எண்ணிக்கை 2025-இல் 34-ஆகக் குறைந்தது.
2026-இல் இதுவரை இந்த எண்ணிக்கை 36-ஆக உள்ளது.
இந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி, நாடு முழுவதும் தனிநபர் அடிப்படையில் குற்றங்கள் குறைந்துள்ளன.
ஆனாலும் Peel பிராந்தியத்தை போன்ற சில பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
