வேலை நிறுத்தத்தின் போது மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கனடிய மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடிய வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் Garda ஊழியர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தின் போது ஒப்பந்த பணியாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்களின் சேவைகளைப் பயன்படுத்தியதன் மூலம், கனடிய வங்கி கனடிய தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதாக கனடிய தொழில் உறவுகள் வாரியம் செவ்வாய்க்கிழமை (07) பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
வங்கிக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே புதிய கூட்டு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சிறந்த ஊதியம், சலுகைகள், நிலையான பணி நேரங்களை வலியுறுத்தி கனடிய வங்கியின் பாதுகாப்பு அதிகாரிகள் June மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய வங்கியின் Ottawa, Montreal அலுவலகங்களில் உள்ள 63 பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், Montreal ஊழியர்கள் நிர்வாகத்தால் பணிக்கு அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கனடிய பொதுச் சேவை கூட்டமைப்பு
தெரிவித்தது.
வேலை நிறுத்தத்தின் போது வங்கி ஊழியர்களை தொடர்பு கொண்டதாகவும், பாதுகாப்புப் பணிகளுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனத்தை ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நிர்வாகக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
கனடிய தொழில்துறை உறவுகள் வாரியத்தின் முடிவை மதிப்பதாகவும், தங்கள் ஊழியர்கள், வளாகங்களுக்கு தேவையான பாதுகாப்பு அளவைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த முடிந்தவுடன் அதற்கேற்ப செயல்பட உள்ளதாகவும் மத்திய வங்கி செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
