கனடியர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் Mark Carney வலியுறுத்தினார்.
கூட்டமைப்பின் 159-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக, கனடியர்கள் புதன்கிழமை (01) நாடு முழுவதும் ஒன்று கூடினர்.
மாறிவரும் உலக நிலை, உருவாகி வரும் பிரிவினைவாத இயக்கங்களை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இம்முறை கனடா தினம் முக்கியத்துவம் பெற்றது.
தலைநகர் Ottawa-வில் நடைபெற்ற கனடா தின கொண்டாட்டத்தில் பிரதமர் Mark Carney உரையாற்றினார்.
கனடா கூட்டாண்மை, இணக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என அவர் தனது உரையில் கூறினார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கனடியர்கள் உறுதியுடனும் தளராத மன உறுதியுடனும் நின்றிருப்பதாகவும் Mark Carney தனது உரையில் தெரிவித்தார்
பிரிவினைவாதம் தலைதூக்கியுள்ள Alberta மாகாணத்திலும் பிரதமர் கனடா தின நிகழ்வில் பங்கேற்ற ஏற்பாடாகியிருந்தது.
புதன் மாலை Edmonton நகரில் நடைபெற்ற கனடா தினக் கொண்டாட்டத்தின் போது Mark Carney உரை நிகழ்த்த இருந்தார்.
கனடா தினத்தை முன்னிட்டு Alberta-வில் ஒரு பிரதமரின் பங்கெடுப்பு என்பது அரிதான நிகழ்வாக அமைந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
கனடாவில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது பிரிவினை குறித்த கட்டாயத் தன்மை கொண்ட பொது வாக்கெடுப்பை நடத்துவதா என்பது குறித்து இந்த இலையுதிர் காலத்தில் Alberta மக்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் சூழலில் இந்த பயணம் அமைந்தது.
ஆனாலும் பிரதமரின் பயண திட்டம், இடியுடன் கூடிய மழையால் அவரது விமானம் குறித்த நேரத்தில் புறப்பட முடியாமல் போனதால் பாதிக்கப்பட்டது.
Ottawa-வில் நிலவிய வானிலை காரணமாக அவரது விமானம் புறப்பட முடியவில்லை எனவும், அதனால் Edmonton-னில் நடைபெற இருந்த கனடா தின கூட்டத்தில் உரையாற்ற குறித்த நேரத்திற்கு பிரதமரினால் அங்கு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டதால் அவரது பங்கேற்பு இரத்து செய்யப்படுவதாகவும் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
புதன் மதியத்தின் பின்னர் Ottawa நகரைத் தாக்கிய இடியுடன் கூடிய மழையானது, பலத்த காற்று, கனமழை, மின்னல், ஆலங்கட்டி மழைக்கான அபாயத்தை ஏற்படுத்தியது.
இதனால் Ottawa விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது..
