கனடியர்கள் நாடளாவிய ரீதியில் உறைபனி மழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ள நிலையில் 50 ஆயிரம் பேர் வரை மின்சாரத்தை இழந்தனர்.
Ontario-விலிருந்து Newfoundland வரையிலான நாட்டின் பெரும்பகுதி புதன்கிழமை (11) குளிர்கால வானிலையை எதிர்கொண்டது.
சுற்றுச்சூழல் கனடாவின் கூற்றுப்படி, சில பகுதிகளில் கடுமையான உறைபனி மழை எதிர்கொள்ளப்பட்டது.
இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
கனடாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான Montreal-Trudeau விமான நிலையத்தில், புதன்கிழமை திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் விமான நிறுவனங்களால் இரத்து செய்யப்பட்டன.
புதன் பிற்பகல் நிலவரப்படி, Ottawa சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
தவிரவும் Quebec நகரத்தின் Jean Lesage சர்வதேச விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
Ottawa, Montreal, Quebec நகரத்தை உள்ளடக்கிய Ontario-வின் Huntsville நகரில் இருந்து கிழக்கே நீண்டுள்ள ஒரு பகுதியில் புதன் காலை உறைபனி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கு 24 மணி நேரத்திற்குள் 20 முதல் 40 millimetres வரை உறைபனி மழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்தது.
தவிரவும் Toronto பெரும்பாக பகுதி உட்பட தெற்கு Ontario முழுவதும் மழை எச்சரிக்கையின் கீழ் இருந்தது.
அங்கு நாள் முழுவதும் கனமழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டது.
தெற்கு Ontario-வின் சில பகுதிககளில் மொத்தம் 50 முதல் 60 millimetres வரை மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டது.

கடும் புயல் கிழக்கு நோக்கி நகர்வதால் Ontario-வில் பல்லாயிரக் கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
புதன் பிற்பகல் நிலவரப்படி மத்திய Ontario-வில் 33,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக Hydro Ontario தெரிவித்தது.
Quebec முழுவதும், புதன் நண்பகலில் 10,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.
Ontario, Quebec-கின் வடக்கே உள்ள சில பகுதிகளில் புதன்கிழமை உறைபனி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
St. Lawrence ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள வடகிழக்கு Quebec-கின் ஒரு பகுதியில் புதன் மாலை முதல் வியாழக்கிழமை (12) பிற்பகல் வரை 40 centimetres வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
வடக்கு, தெற்கு New Brunswick பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கைகள் அமுலில் இருந்தன.
சில பகுதிகளில் 15 முதல் 25 centimetres வரை பனி, பனிக்கட்டிகள் எச்சரிக்கை அமுலில் இருந்தது.
இந்தப் பகுதியில் நான்கு முதல் எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் உறைபனி மழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
Prince Edward தீவின் மேற்குப் பகுதியில் புதன் இரவு முதல் வியாழன் காலை வரை உறைபனி மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
Newfoundland மாகாணத்தின் முழு மேற்கு பகுதியும் வானிலை எச்சரிக்கையின் கீழ் இருந்தது.
Newfoundland மாகாணத்தின் வடக்கில் ஆபத்தான குளிர்கால நிலைமைகளும் தெற்கில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
Atlantic கனடாவில் உள்ள விமான நிலையங்களில் புதன்கிழமை சில உள்நாட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
அவற்றில் Nova Scotia-வின் Halifax Stanfield விமான நிலையம், Newfoundland-டின் St. John சர்வதேச விமான நிலையம் ஆகியன அடங்குகின்றன.
புதன் இரவு 15 முதல் 25 centimetres வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், புதன் காலை தென்மேற்கு Alberta-வின் சில பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
தென்கிழக்கு பகுதிகள் உட்பட British Colombia-வின் சில பகுதிகள், மணிக்கு 80 KM வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதால் சிறப்பு வானிலை அறிக்கைகளின் கீழ் இருந்தன.
