ஈரான் தாக்குதலில் கனடா ‘ஒருபோதும் பங்கேற்காது’ என பிரதமர் Mark Carney உறுதியளித்தார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரில் கனடா ஈடுபடவில்லை என நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்
போர் குறித்த கனடாவின் அணுகுமுறையில் ஒரு முரண்பாடு இருப்பதாக Mark Carney அண்மைய நாட்களில் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.
செவ்வாய்க்கிழமை (10) நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமர் பங்கேற்றார்.
ஈரான் போர் குறித்த கனடாவின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளிக்காததற்காக பிரதமர் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது அட்டவணையை மாற்றி செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தில் பிரதமர் பங்கேற்றார்.
திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஈரான் யுத்தம் குறித்த சபை விவாதத்தில் கலந்து கொள்ளாளது குறித்து Conservative கட்சியினரிடம் இருந்து Mark Carney நாடாளுமன்றத்தில் சில விமர்சனங்களை எதிர்கொண்டார்.

Bloc Québécois தலைவர் Yves-François Blanchet ஈரான் போர் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய கிழக்கிற்கான தனது தொலைநோக்குப் பார்வையை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு Yves-François Blanchet பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
கனடாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என பதிலளித்த Mark Carney, ஈரானின் அணுசக்தி திட்டத்தையும், பயங்கரவாதத்தையும் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கனடா ஆதரிக்கிறது எனவும் கூறினார்.
அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலில் கனடா பங்கேற்கவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திய பிரதமர், ஒருபோதும் அதில் கனடா பங்கேற்காது என உறுதியளித்தார்.
மத்திய கிழக்கு நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உட்பட, தான் தொடர்பில் உள்ள G7 நாடுகளின் தலைவர்கள் பட்டியலையும் Mark Carney வெளியிட்டார்.
ஈரானில் பதற்றத்தை குறைப்பதில் G7 நாடுகளின் தலைவர்கள் ஒரு பொதுவான நிலைப்பாட்டைக் காண்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
