கனடாவின் நிதிப் பற்றாக்குறை கடந்த வசந்தகால கணிப்புகளை விடக் குறைந்துள்ளது என்பது தான் தற்போதைய மறுக்க முடியாத உண்மை என கனடிய நிதியமைச்சர் François-Philippe Champagne தெரிவித்தார்.
புதிய மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்த எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சரின் இந்தக் கருத்து வெளியானது.
மத்திய வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், மக்களின் வாழ்வாதாரச் செலவுகளைக் குறைக்கவும் $142 பில்லியன் மதிப்பிலான புதிய நிதி ஒதுக்கீட்டு திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை Conservative கட்சித் தலைவர் Pierre Poillievre, புதிய ஜனநாயகக் கட்சி (NDP) தலைவர் Avi Lewis ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதில் அறிவிக்கப்பட்டுள்ள $36 பில்லியன் தொழில் முதலீட்டு வரிச் சலுகைகளை Avi Lewis சாடினார்.
அதேபோல் Pierre Poilievre, இதனை ஒரு “ஆபத்தான Credit Card திட்டம்” என விமர்சித்திருந்தார்.
இவற்றுக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் குறைந்துள்ள பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரம், மக்களுக்கான நேரடி நன்மைகளை குறிப்பிட்டார்.
நடப்பு நிதியாண்டின் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை கடந்த வசந்த காலத்தில் கணிக்கப்பட்டதை விட $3 பில்லியன் குறைந்து $62.3 பில்லியனாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்ட François-Philippe Champagne, இது எங்களின் முறையான நிதி நிர்வாகத்தைக் காட்டுகிறது என கூறினார்.
கனடா பொருளாதார ரீதியாக வளர்வதற்கான ஒரு லட்சியப் பாதையையே இந்த வரவு-செலவு திட்டம் வகுத்துள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தனது வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகள், தற்போது எதிர்கொள்ளப்படும் வேலை இழப்புகளைத் தடுத்து, கனடிய வணிகங்களை உலகளாவிய சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தூண்டும் எனவும் நிதியமைச்சர் François-Philippe Champagne நம்பிக்கை தெரிவித்தார்.
