இலங்கையின் செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச புலனாய்வு, பொறுப்புக்கூறல் கோரி கனடிய நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான சர்வதேச விசாரணை கோரி கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்தனர்.
“செம்மணி: கூட்டுப் புதைகுழிகளிலிருந்து பொறுப்புக்கூறல் வரை” என்ற பொருண்மையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று செவ்வாய்க்கிழமை (20) நாடாளுமன்ற வளாகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் ஆகியோரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சி வேறுபாடின்றி கனடிய முதன்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், மாணவர் ஆர்வலர்கள், தமிழ் சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதியை உறுதிசெய்யவும் கனடா தனது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த நிகழ்வில் பலமாக எழுந்தது.
இலங்கை அரசு சர்வதேச சட்டங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என இந்த மாநாட்டில் உரையாற்றிய கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தினார்.
செம்மணி இன்னும் முடிவடையாத குற்றச் சம்பவத்தின் சாட்சியமாக உள்ளது என அங்கு உரையாற்றிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் கலாநிதி மரியோ அருள்தாஸ் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நாளை கனடிய நாடாளுமன்றம் ஏக மனதாக அங்கீகரித்த நிலையில் செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்த மாநாடு நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
