Alberta மாகாணத்தில், கனடிய வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த மாகாணப் பொது வாக்கெடுப்பு திங்கட்கிழமை (19 ) நடைபெறுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு இரவு 8 மணி வரை தொடரவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில், Alberta மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது தனியாக பிரிய வேண்டுமா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வி உட்பட மொத்தம் 10 கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
இதில் முதல் ஐந்து கேள்விகள் மாகாணத்தின் குடியேற்றக் கொள்கைகள், பொருளாதார குடியேற்றவாசிகளை தேர்ந்தெடுப்பது குறித்தும், 6 முதல் 9 வரையிலான கேள்விகள் கனடாவின் அரசியலமைப்பு சட்ட மாற்றங்கள், மத்திய அரசிடமிருந்து மாகாணத்திற்கான கூடுதல் அதிகாரங்களை பெறுவது குறித்தும், பத்தாவது கேள்வி Alberta கனடாவின் ஒரு மாகாணமாக தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்பதாகவும் அமைகிறது.
இதில் கடந்த 13 முதல் 17 வரை நடைபெற்ற முன்கூட்டிய வாக்குப்பதிவு, தபால் வழியிலான வாக்குப் பதிவுகளில் மொத்தம் 1,356,873 மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இது மாகாணத்தின் ஒட்டுமொத்த தகுதியான வாக்காளர்களில் 43.1 சதவீதமாகும்.
இது கடந்த தேர்தலை விட அதிகமானதாகும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மாகாண பொதுத் தேர்தலின் போது இதே காலகட்டத்தில் 27.5 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய கருத்துக் கணிப்புகளின்படி, சுமார் 70 சதவீத Alberta மக்கள் கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருக்கவே விரும்புகின்றனர் எனவும், கால் பகுதி மக்கள் மட்டுமே பிரிவினையை ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தத் தேர்தலின் தற்காலிக முடிவுகள் திங்கள் இரவு முதல் வெளியாக ஆரம்பிக்கும் எனவும், அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் October 29 அன்று அறிவிக்கப்படும் எனவும் Elections Alberta தெரிவித்துள்ளது.
