Forever Canadian கூட்டுப் பேரணிகளில் பிரதமர் Mark Carney இந்த வாரம் பங்கேற்கிறார்.
Alberta பொது வாக்கெடுப்பு களம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
October 15 வியாழக்கிழமை Calgary நகரில் நடைபெறும் பேரணியிலும், 16 வெள்ளிக்கிழமை Edmonton நகரில் நடைபெறும் பேரணியிலும் Mark Carney பங்கேற்க உள்ளார்.
பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.
Alberta மாகாணப் பிரிவினை குறித்த பொது வாக்கெடுப்புக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
Alberta மாகாண மக்கள் பிரிவினைவாத பாதையைத் தவிர்த்துக் கனடா என்ற ஒற்றைக் கூட்டாட்சிக்குள்ளேயே உறுதியாக நீடிப்பதன் அவசியத்தை வலியுறுத்த பிரதமர் இரண்டு பிரம்மாண்ட ‘Forever Canadian’ கூட்டுப் பேரணிகளில் பங்கேற்பார் என பிரதமர் அலுவலகம் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
Alberta மாகாணத்தின் முன்னாள் துணை முதல்வர் Thomas Lukaszuk தலைமையில் Alberta கனடாவிற்குள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்படும் இந்தப் பேரணியில் பிரதமர் உரை நிகழ்த்த உள்ளார்.
Alberta மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவரான பிரதமரின் இந்தப் பங்கேற்பு பிரதானமாக நோக்கப்படுகிறது.
இந்த வாரம் Mark Carney தனது Thanksgiving செய்தியிலும், “கனடா என்பது பிளவுகளின் மேல் கட்டியெழுப்பப்பட்ட தேசம் அல்ல” என குறிப்பிடத்துடன் “இதைப் பிரிவினையில் இருந்து பாதுகாத்து போராட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்” என கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வெள்ளியன்று Edmonton பேரணியில் பங்கேற்கும் அதே நாளில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre Calgary நகரில் நடைபெறும் Canada Strong and Free மாநாட்டில் கலந்து கொண்டு, Alberta மக்கள் கனடாவுக்குள்ளேயே நீடிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய உள்ளார்.
