கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிகளை ஆதரித்துவிட்டு, வேலை நீக்கத்திற்கு இயற்கை மீது பழிபோடக் கூடாது என Stelco நிறுவனத்திற்கு அமைச்சர் Mélanie Joly கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை காரணம் காட்டி, Hamilton நகரில் உள்ள Stelco தொழில்சாலையில் இருந்து 500 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர்.
இதில் அமெரிக்க உரிமையாளரான Cleveland-Cliffs நிறுவனத்திற்கு எதிராக கனடிய அரசாங்கம் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை புதன்கிழமை (07) சந்தித்த கனடாவின் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் Mélanie Joly, அமெரிக்க நிறுவனத்தின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக சாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது இயற்கையின் சதி அல்ல என கூறிய Mélanie Joly, திட்டமிட்ட வஞ்சகம் இது என குற்றம்சாட்டினார்.
Stelco நிறுவனத்தின் அமெரிக்கத் தாய் நிறுவனமான Cleveland-Cliffs நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Lourenco Goncalves, கனடாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் 50 சதவீத வர்த்தக வரிகளைப் பொதுவெளியில் தீவிரமாக ஆதரித்தவர் என்பதை Mélanie Joly பகிரங்கமாக சுட்டிக்காட்டினார்.
இந்த முரண்பாடான கொள்கையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் Mélanie Joly தங்களது சுயநலத்தால் ஏற்பட்ட இந்த வேலை நீக்க நடவடிக்கையை அவர்கள் இயற்கையின் சதி என்றோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டை மீறிய விதிவிலக்கு நெருக்கடி என்றோ கூறி தப்பிக்க முடியாது என தெரிவித்தார்.
இந்த விடயத்தில் மத்திய அரசின் தலையீட்டை Hamilton நகர முதல்வர் Andrea Horwath, USW Local 1005 தொழிற்சங்கத் தலைவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
