தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

ஏழாம் வட்டாரத்தை இலக்கு வைத்து இணையும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள்? 

கனடிய தமிழர்களுக்கு முதலாவது அரசியல் வெற்றியை பெற்றுத் தந்த தொகுதியை மீண்டும் தமதாக்கும் முயற்சியில் தமிழர்கள் ஒன்றிணைகின்றனரா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. Markham நகரசபையின் ஏழாம் வட்டாரம் மீண்டும் தமிழர்கள் வசம் வந்தடையும் ஒரு சாத்திய நிலை அண்மைக்காலத்தில் தோன்றுகின்றது. அதற்கு கட்டியம் கூறும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.

October மாதம் நடைபெற உள்ள நகரசபை தேர்தலில் Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்தில் போட்டியிடும் கிள்ளி செல்லையாவின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல மட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள்  கட்சி பேதமின்றி பங்கேற்றது பலரையும் ஆச்சரியப்படவைத்த ஒன்றாகும். இந்த நகர்வு Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்தை மீண்டும் தமிழர்கள் வெற்றி பெறும் ஒரு சமூகத்தின் முயற்சியாக நோக்கப்படுகிறது.

ஏழாம் வட்டாரமும் தமிழர்களும்

கனடிய தமிழர்களுக்கும் Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்திற்கும் ஒரு பிணைப்பு உள்ளது. கனடிய தமிழர்களுக்கு முதலாவது அரசியல் வெற்றியை பெற்றுத் தந்தது இந்த Markham நகரசபையின் ஏழாம் வட்டாரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு November மாதம் 13-ஆம் திகதி நடைபெற்ற நகரசபை தேர்தலில் இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக லோகன் கணபதி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கனடாவில் அரசியல் பதவி ஒன்றை வெற்றி பெற்ற முதலாவது தமிழராக அவர் வரலாற்றில் இடம் பிடித்தார். இந்த தேர்தலில் Markham நகரசபையின் ஏழாம், எட்டாம் வட்டாரங்கள் இணைந்த ஆங்கிலப் பொது கல்விச் சபை அறங்காவலர் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட நீதன் சான் வெற்றியை தனதாக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கனடிய தமிழர்களின் அரசியல் பயணத்தில் Markham நகரசபையின் ஏழாம் வட்டாரம் 2006-ஆம் ஆண்டு முதல் முக்கிய இடம் பிடித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி …..

 

தொடர்ந்தும் 2018 வரை இந்தத் தொகுதியில் லோகன் கணபதி நகரசபை உறுப்பினராக தொடர் தேர்தல்களில் வெற்றி பெற்றிந்தார். 2006-ஆம் ஆண்டு முதல் மூன்று தவணைகளில் லோகன் கணபதி என்ற தமிழ் பிரிதிநிதியினால் நிரப்பட்ட இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினருக்கான ஆசனத்தை 2018-ஆம் ஆண்டு Khalid Usman வெற்றி பெற்றார். Markham Thornhill தொகுதியில் PC கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக லோகன் கணபதி வெற்றி பெற்ற நிலையில், ஏழாம் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் ஒன்பது பேர் போட்டியிட்டனர். இவர்களில் ஐவர் தமிழர்கள். இவர்களுக்குள் தோன்றிய போட்டியில் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து செல்ல இலகுவாக Khalid Usman மீண்டும் நகரசபை உறுப்பினரானார்.

2022-இல் மீண்டும் இந்தத் தொகுதி தமிழர்கள் வசம் வந்தது. மூன்று முறை York பிராந்திய கல்விச் சபை உறுப்பினராக பதவி வகித்த ஜுவனீட்டா நாதன் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினரானார். கடந்த நான்கு (2006, 2010, 2014, 2018 ) தேர்தல்கள் போலல்லாமல் இம்முறை ஒரு தமிழர் மாத்திரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். இது  ஜுவனீட்டா நாதனின் வெற்றியை இலகுவாக்கியது. 2025-இல் ஜுவனீட்டா நாதன் Liberal கட்சியின் சார்பில் Pickering-Brooklin தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன் காரணமாக மீண்டும் Markham நகரசபையின் ஏழாம் வட்டாரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தமிழ் வாக்குகள் பிரிய Nimisha Patel இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்று நகரசபை உறுப்பினரானார்.

2026 தேர்தல்

மீண்டும் இந்த வருடம் Ontario மாகாணம் முழுவதும் நகரசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பல தேர்தல்களில் நடைபெற்றதை போலல்லாமல் இம்முறை ஒரு தமிழர் மாத்திரம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தமிழ் வேட்பாளர்களில் ஒருவர் மாத்திரம் இம்முறை போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து ஓர் மூலோபாய ஒப்பந்தம் காணப்பட்டுள்ளதாக கூறத் தோன்றுகிறது. இதன் மூலம் கடந்த பல வருடங்களில் இம்முறை ஒரு தமிழர் மாத்திரம்  தேர்தல் களத்தில் உள்ளார். இது தமிழ் வேட்பாளரின் வெற்றியை சாத்தியமாக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

Pickering-Brooklin தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனீட்டா நாதன் ……

 

இதற்கு கட்டியம் கூறி நிற்பதுபோல, கிள்ளி செல்லையாவின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வில் மத்திய, மாகாண தமிழ் பிரதிநிதிகளும், பல்வேறு தமிழர் அமைப்புகளின் உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து பங்கேற்றிருந்தனர். கனடிய தமிழர் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இதுபோன்ற ஒரு நகர்வு முன்னெடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனீட்டா நாதன், மாகாணசபை துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் என தமிழ் பிரதிநிதிகள் ஒன்றிணைத்து ஒரு தமிழ் நகரசபை வேட்பாளரின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வுக்கு வழங்கியிருந்த முக்கியத்தும் பலர் மத்தியிலும் கவனம் பெறுகிறது.

வேட்பாளர் கிள்ளி செல்லையா

கிள்ளி செல்லையா இந்தத் தொகுதிக்கான தேர்தலில் முன்னர் இரண்டு முறை போட்டியிட்டவர். 2018 தேர்தலில் அவர் 14.31 சதவீதமான வாக்குகளுடன் நான்காவது இடத்தில் வந்திருந்தார். Khalid Usman வெற்றி பெற்ற இந்தத் தேர்தலில் தமிழ் வாக்குகள் ஐந்து தமிழ் வேட்பாளர்களால் பிரிக்கப்பட்டது.

Ontario மாகாண துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் ……

 

2022 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஜுவனீட்டா நாதன் வெற்றி பெற்ற தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் மீண்டும் பிரிந்து செல்லாமல் இருக்க கிள்ளி செல்லையா தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்திருந்தார். இந்த மூலோபாயம் பலனளித்தது. ஜுவனீட்டா நாதன் நகரசபை உறுப்பினரானார்.

ஜுவனீட்டா நாதன் பதவி விலக, மீண்டும் 2025 இடைத் தேர்தலில் கிள்ளி செல்லையா களம் இறங்கினார். மொத்தம் எட்டு வேட்பாளர்களில் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் உள்ளடங்கிய இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து செல்ல Nimisha Patel நகரசபை உறுப்பினரானார். இந்தத் தேர்தலில் கிள்ளி செல்லையா 25.64 சதவீதமான வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் வந்திருந்தார்.

மூன்றாவது முயற்சி வெற்றியாகுமா?

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் இம்முறை நகரசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் கனடிய தமிழர்களுக்கு முதலாவது அரசியல் வெற்றியை பெற்றுத் தந்த  தொகுதியை மீண்டும் தமதாக்கும் முயற்சியில் தமிழர்கள் ஒன்றினைகி ன்றனர் என்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் வகைப்படுத்த முடியவில்லை. கட்சி வேறுபாடுகள் கடந்த, இரண்டு வெவ்வேறு மட்டத்தில் உள்ள வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இந்த நகர்வுக்கு இணங்கியது ஆரோக்கியமானது – பலரது கண்களையும் உறுத்தியது  – தொடர வேண்டியது.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

NCCTயின் அருவருக்கும் விளம்பரத் தாகமும், உரிமை கோரலும்!

Gaya Raja

நாங்கள் இந்த நாட்டை அழிக்க வந்த பயங்கரவாதிகள் அல்ல! – MV Sun Sea கப்பல் பயணத்தின் 15-ஆவது ஆண்டு நிறைவு

Lankathas Pathmanathan

கனடா தினத்திற்குள் கனேடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது சாத்தியமா?

Gaya Raja

Leave a Comment