Doug Ford அரசாங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், Toronto-வில் தங்குவதற்காக விடுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த Progressive Conservative (PC) சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூரில் இரவு தங்குவதற்காக வரி செலுத்துவோரிடம் இருந்து $100,000-க்கும் மேல் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.
Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த மொத்தம் 16 PC கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் கடந்த சில ஆண்டுகளில் விடுதிகளுக்காக மொத்தம் $107,118 வரி செலுத்துவோர் பணத்தை செலவு செய்துள்ளனர்.
மாகாண போக்குவரத்து அமைச்சரின் நாடாளுமன்ற உதவியாளரும், Brampton கிழக்கு PC மாகாணசபை உறுப்பினருமான Hardeep Grewal இதில் அதிக செலவு செய்தவராவார்.
2022-இல் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவர் Toronto-வில் விடுதிகளில் தங்குவதற்கான செலவுகளுக்காக வரி செலுத்துவோரிடமிருந்து $28,008 கட்டணம் வசூலித்துள்ளார்.
அவரது தொகுதி அலுவலகம் மாகாணசபையில் இருந்து 40 KM தொலைவில் உள்ளது.
தவிரவும் Mississauga—Streetsville தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இணை அமைச்சர் Nina Tangri, கடந்த மூன்றாண்டுகளில் Toronto தங்குவதற்கான விடுதிகளுக்காக $18,976 செலவிட்டுள்ளார்.
அவரது தொகுதி அலுவலகம் சட்டசபையில் இருந்து 40 KM-க்கும் குறைவான தொலைவில் உள்ளது.
Brampton மத்திய தொகுதி மாகாணசபை உறுப்பினரும், இணை அமைச்சருமான Charmaine Williams, கடந்த மூன்று ஆண்டுகளில் Toronto-வில் தங்கியதற்காக $15,865 தொகையை பொது நிதியிலிருந்து செலவாகக் கோரியுள்ளார்.
Oakville தொகுதி அமைச்சர் Stephen Crawford, Scarborough மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் David Smith ஆகியோர், 2023-ஆம் ஆண்டு முதல் Toronto-வில் தங்குமிடங்களுக்காக தலா $6,500-க்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்துள்ளனர் என பதிவுகள் காட்டுகின்றன.
அமைச்சர் Stan Cho, 2023 முதல் 2026 வரையிலான காலத்தில் Toronto-வில் தங்குவதற்காக விடுதிகளுக்கு $16,203 செலவிட்டார்.
விடுதிகளில் தங்குவதற்காக 2023-24-இல் சுமார் $1,400, அடுத்த ஆண்டில் சுமார் $3,000 , 2025-26-இல் சுமார் $11,700 என அமைச்சர் செலவிட்டுள்ளார்.
இவர் மாகாண சபையில் இருந்து ஆறு KM தொலைவில் வசித்து வருகிறார்.
இந்த விபரம் வெளியான நிலையில் அவர் இதில் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் Stan Cho, subway வழித்தடங்களை மாற்றாமலே தனது தொகுதியில் இருந்து மாகாணசபை வரை செல்ல முடியும் என NDP தலைவர் Marit Stiles ஒரு அறிக்கையில் நினைவுபடுத்தினார்.
முதல்வர் Doug Ford அரசாங்கத்தில் ஆடம்பரமான செலவு செய்யும் கலாச்சாரம் இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாக இடைக்கால Liberal கட்சித் தலைவர் John Fraser கூறினார்.
அந்தச் செலவுகளைப் பெறுவதற்குத் தங்களுக்கு உரிமை இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கருதினார்கள் என தான் நினைப்பதாக John Fraser கூறினார்.
இந்த நிலையில் மாகாணசபை விதிகளுக்கு அடங்காத வகையில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு செலவும் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் என பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் இந்தச் செலவுகளை திருப்பிச் செலுத்த வேண்டும் என Marit Stiles கூறினார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் Nina Tangri, Stan Cho, Charmaine Williams, Stephen Crawford ஆகிய அனைவரும் வரி செலுத்துவோரின் நிதியால் வழங்கப்படும் வாகனங்கள், ஓட்டுநர்களை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
