ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbour கனடாவின் 31-வது ஆளுநர் நாயகமாக பதவியேற்றார்.
கனடாவில் மன்னருக்கான புதிய பிரதிநிதியை நியமிக்க திங்கட்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் Louise Arbour ஆளுநர் நாயகமாக பதவியேற்றார்.
பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை May மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்
2022-ல் அரியணை ஏறிய பின்னர் Louise Arbour-ரின் முதல் நியமனத்திற்கு மன்னர் Charles ஒப்புதல் அளித்துள்ளார்.
Louise Arbour கடந்த வாரம் Buckingham அரண்மனையில் மன்னரை சந்தித்தார்.
79 வயதான Louise Arbour, 2021-ல் கனடாவின் முதல் முதற்குடி பழங்குடி ஆளுநர் நாயகமாக பதவியேற்ற Mary Simon-னுக்குப் பதிலாக பொறுப்பேற்கிறார்.
July மாதம் பதவி காலம் முடிவடைய உள்ள ஆளுநர் நாயகம் Mary Simon-க்குப் பதிலாக புதிய ஆளுநர் நாயகம் நியமிக்கப்பட்டார்.
கனடிய ஜனநாயகத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றில் Louise Arbour தனது புகழ்பெற்ற பணி விவர பட்டியலில் ஆளுநர் நாயகம் என்ற பட்டத்தையும் இணைத்து கொண்டார்.
கனடிய Senate கட்டிடத்தில் பிரதமர் Mark Carney, அவரது மனைவி Diana Fox, பதவி விலகும் ஆளுநர் நாயகம் Mary Simon உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களால் Louise Arbour திங்கள் காலை வரவேற்கப்பட்டார்.
Senate கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்னர், Louise Arbour உள்ளிட்ட பிரமுகர்களுக்கும் Algonquin மூத்தவர் பிராந்திய வரவேற்புரையை வாசித்தார்.
கனடாவின் உடன்படிக்கைகள் என்பவை பூர்வகுடி மக்களுக்கும் அரசிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களாகும்.
இதனால், பூர்வகுடி மக்களுக்கும் மன்னருக்கும் இடையிலான உறவு, முடிசூட்டு விழாவின் ஒரு முக்கிய அங்கமாவது குறிப்பிடத்தக்கது .
தலைமை நீதிபதி Richard Wagner, ஆளுநர் நாயகமாக Louise Arbour பதவியேற்பதற்கு எடுக்க வேண்டிய உறுதிமொழிகளை வாசித்தார்.
Montreal லைப் பூர்வீகமாகக் கொண்ட Louise Arbour, 1948-ஆம் ஆண்டு இனப்படுகொலை கொள்கை உடன்படிக்கை நிறுவப்பட்டதிலிருந்து, ருவாண்டாவின் முன்னாள் நகர முதல்வர் ஒருவர் மீதான வழக்கில் இனப்படுகொலைக் குற்றத்திற்கான முதல் தண்டனையையும் பெற்றுத் தந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராகவும், ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களின் தலைமை வழக்கறிஞராகவும் Louise Arbour பணியாற்றியுள்ளார்.
2021-ல் கனடிய இராணுவத்தில் நடந்த பாலியல் முறைகேடுகள் குறித்த ஒரு சுதந்திரமான ஆய்வுக்குத் தலைமை தாங்க அவர் நியமிக்கப்பட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராக பதவி வகித்த போது Louise Arbour இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இலங்கையில் தீவிரமடைந்து வந்த மோதல் குறித்து கவலை தெரிவித்து வந்த Louise Arbour, அனைத்து தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட யுத்தக் குற்றங்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை எழுப்பினார்.
2007-ல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அவர், சுதந்திரமான கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, யுத்த குற்றங்கள் தனிநபர் குற்றவியல் பொறுப்புக்கு வழிவகுக்க கூடும் எனவும் எச்சரித்தார்.
Quebec மாகாணத்தின் Montreal நகரில் பிறந்த அவர், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
மன்னரின் பிரதிநிதியாக Mary Simon July 2021 முதல் ஆளுநர் நாயகமாக பணியாற்றி வருகிறார்.
இந்தப் பதவியை ஏற்ற முதல் முதற்குடி நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இருப்பினும், அவருக்கு பிரெஞ்சு மொழித் திறமை இல்லாத காரணத்தால் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
புதிய ஆளுநர் நாயகம் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளையும் பேசுபவராக இருப்பார் என கடந்த மாதம் வழங்கிய பேட்டியில் Mark Carney கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
