தேசியம்
செய்திகள்

சர்வதேச மாணவர் உயர்கல்வி சேர்க்கை பெருந்தொற்று கால நிலைக்கு குறைவு

கனடாவின் சர்வதேச மாணவர் சேர்க்கை பெருந்தொற்று கால நிலைக்கு குறைந்துள்ளது.

கனடாவின் சர்வதேச மாணவர் சேர்க்கை, COVID பெருந்தொற்றின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்த நிலைக்குக் குறைந்துள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆரம்ப கட்ட தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியானது.

2003-2004 கல்வி ஆண்டுக்கும் 2023-2024 கல்வி ஆண்டுக்கும்  இடையில், கனடாவில் உள்ள பொது உயர்கல்வி நிறுவனங்களில் முழுநேர சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்தது.

ஆனால், 2024 January-யில் மத்திய அரசு மாணவர் சேர்க்கைக்கு விதித்து கட்டுப்பாடுகளின் பின்னர் அந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

புதிய மதிப்பீடுகளின்படி, பொது உயர் கல்வி நிறுவனங்களில் முழுநேர சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024-2025 கல்வியாண்டில் நான்கு சதவிகிதமும், 2025-26 கல்வியாண்டில் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பொது உயர் கல்வி நிறுவனங்களில் முழுநேர சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை, 2021-2022-ல் பதிவான நிலைகளுக்கு மீண்டும் கொண்டு வருகிறது.

இந்தக் காலகட்டத்தில் COVID பெருந்தொற்று காரணமாக கனடா முழுவதும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறைந்திருந்தது.

2023-ஆம் ஆண்டில், பொதுக் கல்லூரிகளில் இணைந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை (288,801), பல்கலைக்கழகங்களில் இணைந்தவர்களின் எண்ணிக்கையை (284,160) விஞ்சியது.

ஆனால், குடியேற்ற எண்ணிக்கையில் முன்னெடுக்கப்பட்ட குறைப்புகள் கல்லூரிச் சேர்க்கையைக் கடுமையாகப் பாதித்தன.

2024-2025 ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் (மூன்று சதவீதம்) சரிவு காணப்பட்டாலும், 2025-2026 ஆம் ஆண்டில் கல்லூரி சேர்க்கை 40 சதவீதம் சரிந்தது.

இது 2023-2024 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரிகளில் சர்வதேச மாணவர் சேர்க்கையில் 42 சதவீதம் சரிவை குறிக்கிறது.

பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை 2023-2024 முதல் 2025-2026 வரை 17 சதவீதம் குறைந்து, பெருந்தொற்றுக்கு முந்தைய (2019-2020) நிலைக்குச் சரிந்துள்ளது.

Ontario மாகாணத்தில் சர்வதேச மாணவர் சேர்க்கையில் மிகக் கடுமையான சரிவு காணப்பட்டது.

இது 2024-2025-ஆம் ஆண்டில் ஆறு சதவிகிதமும், 2025-2026-ஆம் ஆண்டில் 36 சதவிகிதமும் குறைந்தது.

2023-2024 ஆம் ஆண்டில், கனடாவில் உள்ள 10 சர்வதேச மாணவர்களில் ஆறு பேர் Ontario மாகாணத்தில் வசித்து வந்தனர்.

கடந்த ஆண்டு இந்த விகிதம் 54 சதவீதமாக குறைந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் Ontario-வின் உயர்கல்வி நிறுவனங்கள் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களை இழந்துள்ளன.

சர்வதேச மாணவர் அனுமதி கட்டுப்பாட்டின் நோக்கம், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகக் குறைப்பதாகும்.

Justin Trudeau அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், Mark Carney  அரசாங்கத்தால் நீட்டிக்கப்பட்டது.

இந்த ஆண்டு, கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறை (Immigration, Refugees and Citizenship Canada – IRCC) 408,000 வரையிலான கல்வி அனுமதிகளை வழங்கும் என எதிர்பார்க்கிறது.

இந்த எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டுக்கான 437,000 என்ற இலக்கை விட ஏழு சதவிகிதம் குறைவாகவும், 2024-ஆம் ஆண்டுக்கான 485,000 என்ற இலக்கை விட 16 சதவிகிதம் குறைவாகவும் உள்ளது என IRCC கடந்த November மாதம் தெரிவித்திருந்தது.

Related posts

G7 நிதி அமைச்சர்கள் கனடாவில் சந்திப்பு!

Lankathas Pathmanathan

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை

Lankathas Pathmanathan

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment