கனடிய சுற்றுலாப் பயணி பலியான மெக்சிகோ உல்லாசப்பயணிகளின் சுற்றுலாத்தல துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோவில் உல்லாசப்பயணிகளின் பிரதான சுற்றுலா தளம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் ஒருவர் பலியானார்.
உல்லாசப்பயணிகளின் மத்தியில் பிரபலமான Teotihuacan pyramids சுற்றுலாத் தலத்தில் திங்கட்கிழமை (20) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த இடத்தில் நிகழ்ந்தது ஒரு திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என மெக்சிகோ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தது.
இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர் 27 வயதான Julio Cesar Jasso Ramirez என அடையாளம் காணப்பட்டார்.
இவர் நடத்திய தாக்குதலில் 29 வயதான கனடியர் ஒருவர் உட்பட 13 பேர் காயமடைந்தனர் எனவும் மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்தது.
அதன்பின் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதில் கொல்லப்பட்ட கனடியர் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
தலைநகர் Ottawa-வில் செய்தியாளர்களிடம் பேசிய கனடிய பிரதமர், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதில் விரைவான விசாரணைக்கு மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக அதிகாரிகள் உதவி வருவதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் தூதரகங்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க பணியாற்றி வருவதாகவும் மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
