தமிழரான ஒரு அகதி கோரிக்கையாளர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நடவடிக்கைகளில் தலையிட போவதில்லை என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த தமிழரான அகதி கோரிக்கையாளர் குகதீஸ்வரன் துரைசிங்கம் எந்த நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நிலை தோன்றியுள்ளது.
இந்த நிலையில் குகதீஸ்வரன் துரைசிங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க நீதிமன்றமே சிறந்த இடம் என அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.
அமைச்சர் பங்கேற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
“இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்” என பதிலளித்த அமைச்சர், “இது குறித்து முடிவெடுப்பதை நீதிமன்றங்களிடமே விட்டுவிடுகிறேன்,” எனவும் கூறினார்.
ஆனாலும் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை ஹரி ஆனந்தசங்கரி ஒப்புக்கொண்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருப்பதால், குறிப்பாக M.V. Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்தவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என தான் கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்திருந்ததை அமைச்சர் குறிப்பிட்டார்.
“இருப்பினும், கனடாவில் உள்ள நீதிமன்றங்களே இந்த விடயத்தில் தீர்ப்பளித்து முடிவு செய்வதற்கு சிறந்த இடமாக இருக்கும் என நான் நம்புகிறேன்,” என ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.
M.V. Sun Sea என்ற கப்பல் 492 பேருடன் தாய்லாந்திலிருந்து British Colombia கடற்கரைக்கு வந்தடைந்தது.
2015-ஆம் ஆண்டு கனடிய அகதிகள் மன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி, M.V. Sun Sea கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 63 சதவீதமானவர்களின் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

எல்லை முகவர்கள், மத்திய காவல்துறையை மேற்பார்வையிடும் பொதுமக்கள் பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை அமைச்சு, கடந்த பதினாறு ஆண்டுகளாக குகதீஸ்வரன் துரைசிங்கத்தை நாடு கடத்த முயற்சி செய்து வருவதாக தெரியவருகிறது.
இந்த அமைச்சரவைக்கு Scarborough-Guildwood-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தலைமை தாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குகதீஸ்வரன் துரைசிங்கத்தை நாடு கடத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
அவரைக் கனடாவிலிருந்து வெளியேற்றுவதை நியாயப்படுத்துவதற்காக, எல்லை முகவர்கள் அவரது பயண ஆவணங்களில் வேண்டுமென்றே தவறான தரவுகளை இணைத்ததாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார்.
கனடா எல்லை சேவைகள் முகமையகம் April 16-ஆம் திகதி குகதீஸ்வரன் துரைசிங்கத்தை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி:
தமிழர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம்?
