தேசியம்
செய்திகள்

மத்திய கிழக்கில் இருந்து கனடிய அரசின் ஏற்பாட்டில் வெளியேற ஆரம்பித்துள்ள கனடியர்கள்?

லெபனானில் இருந்து கனடிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் 75 கனடியர்கள் புதன்கிழமை (04) காலை வெளியேறினர்.

கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தத் தகவலை வெளியிட்டார்.

லெபனானில் இருந்து வெளியேற கனடிய அரசாங்கத்தின் உதவியை மொத்தம் 164 கனடியர்கள் கோரியுள்ளதாக கூறிய அமைச்சர், எதிர்வரும் நாட்களில் மேலும் 200 பேருக்கு விமானங்களில் இடம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஈரான் மோதல் ஐந்தாவது நாளாக தொடரும் நிலையில் வன்முறை பிராந்தியம் முழுவதும் பரவி வருகின்றது.

இந்த நிலையில் புதன் மாலை செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சரும், கனடிய அதிகாரிகளும், மத்திய கிழக்கில் உள்ள கனடியர்கள் கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மத்திய கிழக்கில் தற்போது 106,000 கனடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2,035 பேர் வெளியேற உதவி கோரியுள்ளதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

இதுவரை உதவி கோரியுள்ள கனடியர்களில் சுமார் 85 சதவீதம் பேர் கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பதாக அவர் கூறினார்.

லெபனானில் இருந்து பயணிக்கும் விமானங்களில் கனடிய குடிமக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளை பெற்றுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது.

இஸ்ரேலில் உதவி கோரும் 93 கனடியர்களுக்கு அங்கிருந்து வெளியேற விமானங்கள் இல்லை என அனிதா ஆனந்த் கூறினார்.

அவர்களை எகிப்துக்கு அழைத்துச் செல்ல ஒரு பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஈரானில் இருந்து வெளியேற 74 கனடியர்கள் உதவி கோரியுள்ளதை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

கனடாவுக்கு அங்கு இராஜதந்திர பிரசன்னம் இல்லாத நிலையில், அவர்களும் தரைவழி போக்குவரத்தை ஏற்பாடு செய்யும் திறன் கனடாவிடம் இல்லை எனவும் அனிதா ஆனந்த் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறை தொடரும் நிலையில், அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் கனடிய குடிமக்களுக்கு உதவ பல்வேறு வழிகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வாடகை விமானங்களைப் பெற கனடா முயற்சிப்பதாகவும் அனிதா ஆனந்த் கூறினார்.

கத்தாரில் இருந்து வெளியேற கனடிய அரசாங்கத்தின் உதவியை 237 கனடியர்கள் கோரியுள்ளனர்.

அங்கு வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், வான்வெளி பயணங்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

ஆனால் கத்தார் விமான சேவை, ஏற்கனவே விமான சீட்டுகள் உள்ள 200 கனடியர்களை சவுதி அரேபியாவிற்கு தரை மார்க்கமாக அழைத்துச் செல்ல பேருந்து போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் கனடாவுக்கு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

Related posts

Toronto நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் June 26?

Lankathas Pathmanathan

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Toronto பல்கலைக்கழக Scarborough வளாக தமிழ் ஆய்வுத் தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment