தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

தொடர்ந்து குறி வைக்கப்படுகிறாரா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி?

பிரதமர் Mark Carney தனது முதலாவது  அரசியல் சர்ச்சையை எதிர்கொள்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர் பலரும் எதிர்பார்ப்பது போல் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அல்ல – மாறாக தமிழரான ஹரி ஆனந்தசங்கரி. ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக விமர்சனங்கள் பல தரப்பினரிடம் இருந்து கடந்த சில மாதங்களாக தொடர்கிறது.

ஹரி ஆனந்தசங்கரி, 2006-ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார், பின்னர் Justin Trudeau தலைமையில் Liberal கட்சிக்காக Scarborough-வில் போட்டியிட்டார். அவர் முன்னர் குடியரசு – முதற்குடியினர் விவகார அமைச்சராகவும், பின்னர் நீதி அமைச்சராகவும் பணியாற்றினார். பிரதமர் Mark Carney அவரை கனடாவின் எல்லைகளை கடுமையாக்குவதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதியை திருப்திப்படுத்துவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். அவர் May 13 2025 அன்று இந்த அமைச்சு பதவியை பொறுப்பேற்றார். இந்தப் பதவியில் ஹரி ஆனந்தசங்கரி RCMP, கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, கனடா எல்லை சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்பாக உள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட காலம் முதல் அவர் சவால்களை எதிர்கொள்கிறார்.

தமிழர் என்பதால் இன ரீதியான தாக்குதல்?

ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News ஊடகத்தின் முதலாவது எதிர்மறையான செய்திக் கட்டுரை June மாத ஆரம்பத்தில் வெளியானது. அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயலாற்றும் தகுதியை இந்தக் கட்டுரை கேள்விக்குள்ளாக்கியது. இந்தக் கட்டுரை ஊடக அறமற்றது என கண்டன அறிக்கைகள் வெளியாகின.  ஹரி ஆனந்தசங்கரி மீதான Global News  ஊடகத்தின் இனவெறித் தாக்குதல் அனைத்து தமிழ் கனடியர்களையும் குறிவைக்கிறது என்ற விமர்சனம் தமிழர் சமூகத்திடமிருந்து வெளியானது. ஒரு தமிழர் என்பதால், அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி ஒரு இன ரீதியான தாக்குதலை எதிர்கொள்வதாக அவருக்கு ஆதரவாளர்களின் கருத்துக் கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளியாகின. அமைச்சர் எந்த ஒரு தவறையும் இழைக்கவில்லை என குறிப்பிட்ட ஆதரவு நிலைப்பாடுகள், இதில் எந்த ஒரு ஒழுங்குமுறை மீறலும் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது. தன்னைச் சுய பரிசோதனைக்கு உட்படுத்த அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவது நெறிமுறைகளின் வெற்றி அல்ல. அது அடையாளமே முரண்பாடாக கருதப்படும் ஒரு உற்பத்தி செய்யப்பட்ட நெருக்கடியின் விளைவாகும் என்ற வகையிலான ஆதரவு நிலைப்பாடுகள் அந்தக் காலகட்டத்தில் வெளியாகின.

ஆனால் சர்ச்சை குறையவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்று ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், “தமிழ் சமூகம்” தொடர்பான முடிவுகள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கொள்கை நிலைப்பாடுகளையும் எடுப்பதில் இருந்து விலகுவதாக ஹரி ஆனந்தசங்கரி அறிவித்தார். முரண்பாடு தோன்றுவதை தவிர்க்க இந்த முடிவை எடுத்ததாக அவர்  கூறினார்.  மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான முடிவுகளை தவிர்ப்பதாகவும் அவர் கூறினார். “உலகத் தமிழர் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான விவகாரங்களில் இருந்து விலகும் அமைச்சரின் தீர்மானம், மிகுந்த எச்சரிக்கையுடன், பொது அலுவலகத்தின் உயர்ந்த நெறிமுறைத் தரங்களுக்கான அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்டது’’ என்றார் அவரது பேச்சாளர். ஹரி ஆனந்தசங்கரி ஏன் தமிழ் சமூகம் தொடர்பான கொள்கை முடிவுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார் என்ற கேள்வி அந்த நேரத்தில் பரவலாக எழுந்தது. குறிப்பாக தமிழர் சமூகம் இந்தக் கேள்வியை தொடர்ந்து முன்வைத்தது.

அமைச்சரவையில் இணைவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை கனடாவில் மீளக்குடியமர அனுமதிக்குமாறு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஹரி ஆனந்தசங்கரி கடிதங்கள் எழுதியுள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பிட்ட நபரின் மனைவியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்ததால் மட்டுமே இந்தக் கடிதங்களை எழுதியதாக முதலில் அவரது அலுவலகத்தால் விளக்கம் வழங்கப்பட் டது. ஆனால், நீதிமன்ற ஆவணங்கள் அந்தப் பெண் அவரது தொகுதியில் ஒருபோதும் வசிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டன.

பயங்கரவாத நிதி விசாரணை!

இந்தச் சர்ச்சை சிறிது குறையவே, வெளிச்சத்துக்கு வந்தது 2006-இல் நிகழ்ந்த பயங்கரவாத நிதி விசாரணை விபரங்களாகும். RCMP விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் தொலைபேசி இலக்கம் இருந்ததை Global News ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. 2006-ஆம் ஆண்டு RCMP அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு அலுவலகம் என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் சோதனை செய்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் தொலைபேசி இலக்கம் இருந்ததை தாம் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்றது Global News. ஹரி ஆனந்தசங்கரி Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பண சேகரிப்பு திட்டம் தொடர்பான பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் போது, இந்த சோதனை இடம்பெற்றது.

அவரது தொலைபேசி இலக்கம் காணப்பட்ட ஆவணமானது, உலகத் தமிழர் இயக்கம் குறித்து நடத்தப்பட்ட Project Osaluki என்ற  விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. WTM கனடாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கில் நிதி சேகரித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களால் ஹரி ஆனந்தசங்கரி எந்தவித தவறும் செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. இந்த ஆவணம் குறித்து தெரியாது எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடாவிலுள்ள முன்னணி அமைப்பு என கூறப்படும் அலுவலகத்திற்கு எவ்வாறு சென்றது என்பது  தெரியாது எனவும் அவரது அலுவலகம், Global News ஊடகத்திடம் தெரிவித்தது.

ஒலிப்பதிவு சர்ச்சை!

அண்மைய சர்ச்சைக்கு, அமைச்சருக்கும் அவரது Toronto குடியிருப்பில் வசிக்கும்  குத்தகைதாரருக்கும் இடையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஒரு 20 நிமிட ஒலிப்பதிவு உரையாடல் பின்னணியில் உள்ளது.  Liberal அரசாங்கத்தின் துப்பாக்கிகளை மீளப்பெறும் திட்டம் உள்ளிட்ட விடயங்களை குறித்த ஒலிப்பதிவில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்த உள்ளூர் காவல்துறைக்கு வளங்கள் இருக்குமா என்பது குறித்தும் இந்த ஒலிப்பதிவில் அமைச்சர் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஆனால், இந்தச் சட்டத்தை அமுல்படுத்த காவல்துறையிடம் வளங்கள் இல்லை என அமைச்சர் நம்பினால், ஏன் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்தரப்பினர் கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.

இது போன்ற ஒரு ஒலிப்பதிவு பெரும்பாலும் அரசியல் பதவி விலகல்களுக்கு வழிவகுக்கும் பின்னணியாகும். Toronto Star பத்திரிகை வெளியிட்ட இந்த இரகசிய ஒலிப்பதிவு ஹரி ஆனந்தசங்கரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற காரணமாகியுள்ளது. அமைச்சர் தானாக பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவி நீக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்தியது. இந்த விடயத்தில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அடிப்படை நெறிமுறைகளை மீறியதாக Conservative கட்சி குற்றம் சாட்டுகிறது. இதில் பிரதமரின் பதில் நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் மாத்திரமல்லாது – Liberal   கட்சியினரும் ஆர்வத்துடன் நோக்குகின்றனர்.  அமைச்சர்களிடமிருந்து Mark Carney ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கான பதிலாக இது அமையும்.

இந்த ஒலிப்பதிவு வெளியான மறுதினம் எதிர்க்கட்சியினர் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என 31 முறை நாடாளுமன்ற அமர்வில் அழைப்பு விடுத்தனர். சபையில் இந்த விடயம் கடும் விவாதமானது. ஒரு கட்டத்தில், Brantford பகுதி Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Larry Brock, சபையில் தெரிவித்த கருத்துக்களை சபைக்கு  வெளியே மீண்டும் கூற வேண்டும் என அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அமைச்சர் அவதூறு வழக்கு தொடர்வதற்கான முன்னெடுப்பு இதுவாகும்.

இதுவரையும் பிரதமர் தனது அமைச்சருக்கு ஆதரவாக உள்ளார். அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீதான நம்பிக்கையை Mark Carney உறுதிப்படுத்தினார். இந்த விடயம் அவரது பிரதமர் காலத்தின் முதல் அரசியல் புயலாக தகுதி பெறுகிறது. இதுவரை அது தானாகவே கரை ஒதுங்கும் என்பதில் பிரதமரும், அவரது  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் திருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.

இலங்கதாஸ் பத்மநாதன்

தேசியம் September சஞ்சிகைக்கான கட்டுரை

 

 

 

 

 

 

 

Related posts

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

Gaya Raja

அம்பிகையும் செல்வகுமாரும் செய்தது விவகாரமா? விவாகரத்தா? தனிநபர் வேறு – Issue வேறு

Gaya Raja

B2B – MR.BROWN: From Barrie to Brampton  

Lankathas Pathmanathan

Leave a Comment