தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

நாங்கள் இந்த நாட்டை அழிக்க வந்த பயங்கரவாதிகள் அல்ல! – MV Sun Sea கப்பல் பயணத்தின் 15-ஆவது ஆண்டு நிறைவு

492 இலங்கைத் தமிழர்களுடன் கனடாவை வந்தடைந்த MV Sun Sea கப்பல் பயணத்தின் 15-ஆவது ஆண்டு நிறைவை August 2025 குறிக்கிறது. இவர்களது தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கியது ஆபத்தான பசிபிக் பெருங்கடல் பயணம். இந்தப் பயணக் கதை 2010-இல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டது. கடுமையான நெரிசலுடன், பாதுகாப்பு உபகரணங்கள், கழிப்பறை வசதிகளற்ற பயணம் அது. 380 ஆண்கள், 63 பெண்கள், 49 குழந்தைகள் அடங்கிய பயணிகள் மிகச்சிறிய அளவிலான உணவுடன் உயிர் பிழைத்திருந்தனர். பயணிகளும் போதுமான தண்ணீர் இருக்வில்லை.

புகலிடக் கோரிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒற்றைச்சுவர் அமைப்பு கொண்ட கப்பலின் நெரிசலில் சிக்குண்டு, மரப்பலகைகள் மீது படுத்துறங்கினர். ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பலின் மேற்தளத்தில் இருந்த சிற்றறைகளில் தங்கிப் பயணித்தார்கள். இவர்களின் “சரக்குக் கப்பலின் நிலைமை திகிலூட்டக்கூடியது” என British Colombia மாகாண உச்ச நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு பயணி நடுக்கடலில் இறந்தார். ஐந்து பெண்கள் பயணத்தின் போது கர்ப்பமாக இருந்தனர்.

2010 August 13-ஆம் திகதி Sun Sea கப்பல் British Colombia கடற்பரப்பை அடைந்ததும், அதிலிருந்த அனைத்து பயணிகளும் உடனடியாக தடுத்து வைக்கப்பட்டனர். சிலர் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டனர். கனடிய அரசின் பதில் நடவடிக்கை நம்பிக்கையுடன் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அகதி முகாமில் தடுத்து வைப்பார்கள் என எதிர்பார்த்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல குடும்பங்கள் பிரிக்கப்பட்டன.

அவர்களுக்கு B001-B492 என்ற அடையாள எண்கள் வழங்கப்பட்டதால், அவர்களின் மனிதம் பறிக்கப்பட்டதுடன், தனிப்பட்ட அவர்களின் கதைகளும் கண்ணுக்குத் தெரியாமற்போயின. ஆண்களும் பெண்களும் பல்வேறு தடுப்பு நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். கப்பலில் தங்கள் குழந்தைகளுடன் வந்த பெண்கள் Burnaby இளைஞர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் துணைகளிடமிருந்தும் தந்தையரிடமிருந்தும் பிரிக்கப்பட்டனர். ஆதரவற்ற ஆறு சிறார்கள் British Colombia குழந்தைகள் உதவி நிலையத்தால் அழைத்துச் செல்லப்பட்டனர். தனது தந்தையுடன் வந்திருந்த சிறுவன், அவரிடமிருந்து பிரிக்கப்பட்டு Burnaby இளைஞர் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். குடும்பங்கள் பல மாதங்களாக பிரித்து வைக்கப்பட்டன. தந்தையுடன் தனியாக வந்த சிறுவன், கனடாவில் தனக்கிருந்த ஒரே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டான். தாயகத்தில் இடம்பெற்ற போரின் அழிவுகளால் இந்த சிறுவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர்.

இந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகை கனடியர்கள் மத்தியில் பெரும் விவாதங்களைத் தூண்டியது. இந்தப் பயணிகளில் “சந்தேகத்திற்குரிய மனித கடத்தல்காரர்களும் பயங்கரவாதிகளும்” அடங்குவதாக கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த Vic Toews எச்சரித்தார். இந்த அகதிகள் ஆபத்தானவர்கள், தேவையற்றவர்கள், விரும்பத்தகாத அந்நியர்கள் என்ற கதை Sun Sea கப்பல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பே கட்டமைக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தில் குடிவரவு அமைச்சராக இருந்தவர், கனடியர்களை பயங்கரவாதிகள் கப்பலில் இருப்பதாகக் கூறி பயமுறுத்தினார். இந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எனவும், குற்றவாளிகள் எனவும் மனிதக் கடத்தல்காரர்கள் எனவும் போலித்தனமானவர்கள் எனவும் அவர் மீண்டும் மீண்டும் வகைப்படுத்தினார்.

புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவுகளாலும் குடும்பத்தாரிடமிருந்தான நீண்ட காலப் பிரிவாலும் கடுமையான மனநலப் பிரச்சினைகளை இன்னமும் எதிர்கொண்டு வருகின்றனர். இவர்கள் விரும்பத்தகாதவர்கள், குற்றவாளிகள், பயங்கரவாதிகள் என ஆரம்பத்தில் குத்தப்பட்ட முத்திரையை முறியடிக்க வேண்டியிருந்தது. தனிப்பட்ட முறையில் இது அவர்கள் மீதான நிரந்தர வடுவாக உள்ளது. 15 ஆண்டுகள் தாண்டியும் சில  பயணிகள் தங்களது புகலிடக் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படுவதற்காக இன்று வரை காத்திருக்கிறார்கள்.

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தக் கப்பல் பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது இலங்கையில் அதிகாரிகள் தடுத்து வைத்து சித்திரவதை செய்தனர். இதில் மற்றுமொரு பயணியான கிருஸ்ணகுமார் கனகரத்தினம், 2015-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர் கொலையாளி Bruce McArthur-ரினால் கொலை செய்யப்பட்டார்.

அவ்வாறு கனடாவின் கட்டமைப்பினால் தோல்வியடைந்த ஒருவர் குறித்த பதிவு தான் இது:

 

புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவை வந்தடைந்த Sun Sea கப்பலின் உரிமையாளர் என குற்றம் சாட்டப்பட்ட குணரொபின்சன் கிறிஸ்துராஜா, 10 வருடங்கள் கழித்து தமது பயணம் குறித்து  முதன்முறையாக 2020-இல் பொதுவெளியில் பேசினார். கனடாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களைக் கடத்திய வலையமைப்பைச் சேர்ந்தவர் என குற்றம் சாட்டப்பட்டு, 6 வருடங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வாழ்நாளைக் கழித்து, இரண்டு வழக்குகளை எதிர்கொண்டவர் குணரொபின்சன் கிறிஸ்துராஜா.

45 வயதான குணரொபின்சன் கிறிஸ்துராஜா அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட சில தமிழர்களில் ஒருவர். அவர் மீது ஒரு பயணி எனும் அடிப்படையில் அல்லாது, இலாபம் ஈட்டக்கூடிய மனிதக் கடத்தல் வர்த்தகத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனவும் கப்பலின் உரிமையாளர் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவரது சட்டத்தரணி, அவர் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டதாக வாதிட்டிருந்தார். பல வருடங்களாக சிறையில் அடைத்து வைத்திருந்த, தனது முதற்குழந்தையின் பிறப்பைக் காண விடாது தடுத்த, அவரது குடியேற்ற நிலையை ஊசலாடச் செய்த நடைமுறையை கோபத்துடனும் விரக்தியுடனும் இந்தக் கப்பல் பயணத்தின் 10-ஆவது நிறைவு காலத்தில் குணரொபின்சன் கிறிஸ்துராஜா நினைவு கூர்ந்திருந்தார்.

இவரது வழக்கு பலதரப்பட்ட குடியேற்றங்கள், நீதிமன்ற விசாரணைகளால் மிக மெதுவாக நகர்த்தப்படும்போது, கனடா முழுவதும் கடுமையான விவாதம் எழுந்தது. எதிர்காலத்தில் பெரிய அளவிலான கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் சர்ச்சைக்குரிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிவரவு, அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை குணரொபின்சன் கிறிஸ்துராஜாவும் இன்னும் சிலரும் மீறியதாக அரச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டினர்.

British Colombia சட்டமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற MV Sun Sea கப்பல் பயணத்தின் 10-ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில்  குணரொபின்சன் கிறிஸ்துராஜாவின் மூத்த மகள் பைந்தவி இவ்வாறு கூறினார்:

“இந்த நாடு எனக்கு சிறந்த கல்வியை மட்டுமல்ல, பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை வழங்குகிறது. கடற்பயண துன்பங்கள், என் தந்தையின் சிறைவாசம் ஆகியவற்றிற்கு அப்பால், இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடிகிறது. இந்த நாட்டிற்கும் சக தமிழ் சமூகத்திற்கும் நன்றி”

“நாங்கள் இந்த நாட்டை அழிக்க வந்த பயங்கரவாதிகள் அல்ல, சிறந்த வாழ்க்கைக்காக வந்தோம்” என்ற குணரொபின்சன் கிறிஸ்துராஜாவின் கூற்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்படவேண்டியது.

 

ரம்யா சேது  – LJI Reporter

தேசியம் August 2025 சஞ்சிகையில் வெளியான கட்டுரை ……….

 

Related posts

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: இரண்டாவது வாரம்!

Gaya Raja

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை!

Lankathas Pathmanathan

எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment